எடப்பாடி குற்றச்சாட்டை நாங்க மதிக்கிறதே இல்லை.. கவலையும் இல்லை.. பட்டென சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதும் இல்லை, கவலைப்படுவதும் இல்லை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னை நிம்மதியாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் மழைநீர் பாய்ந்து ஓடியதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கனமழை பாதிப்புகள் குறித்து சென்னை கொளத்தூர் தொகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். கொளத்தூர் செல்வி நகரில் மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்தும், மழை நிவாரண பணிகள் குறித்தும் கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சருடன் அமைச்சர்கள் கேஎன் நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
இந்த ஆய்வை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சென்னையில் வழக்கமாக மழைநீர் தேங்கும் இடங்களில் இந்த முறை தண்ணீர் தேங்கவில்லை. மழை பெய்யும் போது சில இடங்களில் மழைநீர் தேங்கினாலும், மழை நின்றதும் வடிந்து விட்டது. தற்போது புயல் காலத்திலும் தலைநகர் சென்னை நிம்மதியாக இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் மழை விடவில்லை. விழுப்புரம், திண்டிவனம், மயிலம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. மழை நின்றதும் தண்ணீர் வடிந்துவிடும். ஏற்கனவே விழுப்புரம் மாவட்ட அமைச்சர் பொன்முடி அங்கிருந்து பணிகளை கவனித்து வருகிறார்.
விழுப்புரம், கடலூரில் நிவாரண பணிகளை துரிதப்படுத்த மின்சாரத்துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோரை அனுப்பி உள்ளேன். மூத்த அதிகாரிகள் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோரையும் அனுப்பியுள்ளோம். துணை முதல்வர் உதயநிதியும் அங்கு செல்கிறார். அந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் அதிகாரிகள் முகாமிட்டு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
எந்த பிரச்சனை என்றாலும் நான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் களத்தில் இறங்கி மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறோம்.. ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை பாதிப்புகளை அரசு திறமையோடு கையாண்டு வருகிறது. எனவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு குற்றச்சாட்டு வைப்பதே வேலையாகிவிட்டது. அவரது குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதும் இல்லை. கவலைப்படுவதும் இல்லை. அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது" எனத் தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மையத்தின் தகவல்கள் துல்லியமாக இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "வானிலையை ஓரளவுக்குதான் கணிக்க முடியும். புயலின் வேகம் குறைந்து ஒரே இடத்தில் நிற்பதை எப்படி கணிப்பது? திடீரென மாறிவிடுகிறது. வானிலை மையம் கொடுக்கும் தகவல் அடிப்படையில்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications