ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் அரசுக்கு சிறப்பு சேர்க்கிறது! வடசென்னையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: ஒவ்வொரு விவகாரத்திலும் அரசுக்கு எதிராகத்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார் அது போல் பெரியாரை அவமதிப்பவர்களுக்கும் முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார்.
வடசென்னையில் வளர்ச்சி திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் இருந்தனர்.

அவர் அங்கிருந்த மக்களுடன் செல்பி எடுத்தார்கள். முதல்வருக்கு மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் வடசென்னை வளர்ந்த சென்னையாக இருக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு திட்டத்தையும் துணை முதல்வர், துறை அமைச்சர்கள் என பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறார்கள்.
ஒவ்வொரு விவகாரத்திலும் அரசுக்கு எதிராகத்தான் ஆளுநர் பேசி வருகிறார். ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்கு சிறப்பு சேர்ப்பதால் அவர் அப்படியே செயல்பட வேண்டும். பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு மரியாதை கொடுக்க விரும்பவில்லை.
பெரியார் எங்களுக்கு தலைவருக்கு எல்லாம் தலைவர். அவரை விமர்சிப்பவர்ளை எல்லாம் நாங்கள் பொருட்படுத்த தேவையில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கும் சில சம்பவங்களை பெரிதுப்படுத்துகிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து முதலீடு செய்யப்படுகிறது என முதல்வர் தெரிவித்திருந்தார்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 78வது நினைவு நாளையொட்டி, இன்று சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி படத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதையடுத்து, காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்தாதது பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பினார்.
மகாத்மா காந்தி நினைவு நிகழ்வை அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதா? தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்த காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதலமைச்சரிடம் நான் பலமுறை கோரிக்கைகள் விடுத்தேன்.ஆனால், எனது கோரிக்கைகள் பிடிவாதமாக மறுக்கப்பட்டுள்ளன. காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார் என்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பினார் ஆளுநர் ரவி.
இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநர் உரையை வாசிக்காமலேயே கிளம்பிவிட்டார். தனது உரைக்கு முன்பும் பின்பும் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதால் உரையை புறக்கணித்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார். இது போல் பல்வேறு சமயங்களில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications