"இந்தியா"வை பார்த்து மிரளுறாங்க.. தமிழகத்தில் கலவரத்தை உண்டு செய்யவே "பாவயாத்திரை".. ஸ்டாலின் தாக்கு
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்துவது பாத யாத்திரை அல்ல, பாவ யாத்திரை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்து திமுக இளைஞரணி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறுகையில் எனக்கு வயது 70, ஆனால் 20 வயதாக உணர்கிறேன். நான் இளமையாக இருப்பது போல் உணர்கிறேன். சொந்த வீட்டிற்கு வந்ததை போல் நான் கருதுகிறேன். திமுக இளைஞரணியில் இருப்பவர்கள் இளவட்டங்கள் அல்ல, இள ரத்தங்கள்.

கட்சி பணியையும் ஆட்சி பணியையும் சிறப்பாக செயல்படுத்தி நல்ல பெயரை வாங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதியை பார்க்கும் நான் நிம்மதி அடைகிறேன், பிறந்த பலனை அடைகிறேன். இளைஞரணியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு உதயநிதியே உதாரணம். லோக்சபா தேர்தலில் உதயநிதி காட்டிய ஒற்றை செங்கல்லை எதிர்க்கட்சிகள் மறக்கவில்லை.
சேப்பாக்கம் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டாலும் மற்ற தொகுதிகளில் உதயநிதி பிரச்சாரம் செய்து கொடுத்தார். திமுக இளைஞரணியில் உங்களுக்கு வழங்கப்பட்டது பதவி அல்ல பொறுப்பு. பேசி பேசி எழுதி எழுதியே நம் இயக்கம் வளர்ந்தது. முரசொலியை படிங்கள், நான் பள்ளி பருவத்தில் முரசொலி படித்துதான் வளர்ந்தேன். இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறேன்.
திராவிட மாடல் குறித்து திமுக துணை பொதுச் செயலாளர் ஆ ராசா தொகுத்து 20 புத்தகங்களாக வழங்கியுள்ளார். அந்த புத்தகங்களை திரும்ப திரும்ப படியுங்கள். முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்ததால் நான் பெருமையடையவில்லை. மக்களுக்கு நல்லது செய்வதால் நான் பெருமையடைகிறேன். அண்ணா, கருணாநிதி உட்கார்ந்த முதல்வர் நாற்காலியில் நான் உட்காருவேன் என கனவிலும் நினைத்ததில்லை.

கொள்கையைவிட எண்ணிக்கையே அதிகம் பேசப்பட வேண்டும். எதிரி எடுக்கும் ஆயுதத்தையே நாமும் கையில் எடுக்க வேண்டும். I.N.D.I.A. என்ற பெயரை கேட்டாலே சிலர் மிரளுகிறார்கள், சிலர் அலறுகிறார்கள். நேற்று ராமேஸ்வரம் வந்த அமித்ஷா பேசுகிறார், ஒரு குடும்பத்திற்கான ஆட்சி நடக்குதாம்.
நான் சொல்கிறேன் ஆமாம், இங்கு கோடிக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஆட்சிதான் நடக்கிறது. கொரோனா நிவாரணம் ரூ 4000, 18 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு, மகளிருக்கு இலவச பஸ் பயணம், 13 லட்சம் நகை கடன் ரத்து, 8 கோடி பேருக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டம், 1 கோடி பெண்களுக்கு ரூ 1000 உரிமைத் தொகை திட்டம் போன்றவை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் எந்த திட்டத்தையாவது தொடங்கி வைக்க அமித்ஷா வந்துள்ளாரா. பாதயாத்திரையை தொடங்கி வைக்க வந்துள்ளார். அது பாதயாத்திரை அல்ல, பாவ யாத்திரை, 2002 இல் நடந்த குஜராத் கலவரம், தற்போது நடந்த மணிப்பூர் வன்முறைக்கு பாவ மன்னிப்பு கேட்கும் யாத்திரைதான் அது. வாரிசு அரசியல் வாரிசு அரசியல் என சொல்கிறார் அமித்ஷா. இதை கேட்டு கேட்டு எனக்கு காது புளித்துவிட்டது.
மத்திய பிரதேசம் போனாலும் சரி அந்தமான் போனாலும் சரி திமுகவை பற்றிதான் பேசுகிறார் பிரதமர். ஏதோ பாஜக வெல்ல முடியாத கட்சி போல் பயம் காட்டி கொண்டிருக்கிறது. 2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் வாக்குறுதியில் என்ன சொன்னார், தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படும் விவகாரத்திலும் குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் தாக்கப்படும் விவகாரத்திலும் தான் தலையிட்டு தீர்வு காண்பேன்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட இறக்கவிட மாட்டோம் என்றார். ஆனால் 2017ஆம் ஆண்டு தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்டோ என்ற மீனவர் பாஜக ஆட்சி காலத்தில்தான் சுட்டுக் கொல்லப்பட்டார். சென்னையில் ஒரு விழாவில் நரேந்திர மோடி பேசிய போது எங்கள் ஆட்சியில் 1600 பேர் விடுவிக்கப்பட்டார்கள், 313 மீனவ படகுகள் விடுவிக்கப்பட்டன என்றார். அப்படியென்றால், 1600 பேர் கைது செய்யப்பட்டார்கள்தானே, அது போல் 313 மீனவ படகுகள் சிறை பிடிக்கப்பட்டதுதானே
அரசியல் எதிரிகளை சலவை செய்யும் இயந்திரமாக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. அமலாக்கத் துறை இயக்குநராக மிஸ்ராவை தவிர வேறு அதிகாரிகளே இல்லையா. இதைத்தான் உச்சநீதிமன்ற நீதிபதியும் கேட்டார். தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தவே பாதயாத்திரை நடத்தப்படுகிறது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications