மறக்க முடியுமா! அதே இடத்தில் அப்படியே இறங்கி வந்த முதல்வர் ஸ்டாலின்.. இந்த போட்டோவை பார்த்தீங்களா!
சென்னை: சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றி வைக்கும் உரிமையை பெற்றுக்கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றினார்.
நாடு முழுக்க இன்று 76வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாட்டின் 76வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார்.
சென்னை, கோட்டை கொத்தளத்தில் 2வது ஆண்டாக தேசிய கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்வில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதல்வர் ஸ்டாலின்.
நாடு முழுக்க மாநில தலைநகரங்களில் மாநில முதல்வர்கள் கொடி ஏற்றி மரியாதையை செய்தனர்.

ஆளுநர்கள்
குடியரசுத் தினம் மற்றும் சுதந்திர தினத்தின் போது மாநில தலைநகரங்களில் கொடி ஏற்றும் உரிமை மாநில ஆளுநர்களிடம்தான் 1973 வரை இருந்தது. மாநில முதல்வர்கள் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள.. ஆளுநர்தான் கொடி ஏற்றி வந்தார். ஆனால் இந்த வழக்கத்தை எதிர்த்தது முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். 1974ம் ஆண்டு குடியரசுத் தினம் வந்தது. அப்போது ஆளுநராக இருந்த கேதர்தாஸ் காளிதாஸ் ஷா புதிய ஜார்ஜ் கோட்டையில் கொடி ஏற்றினார்.

முதல்வர் கருணாநிதி
மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் கொடி ஏற்றாத போது ஆளுநர் கொடி ஏற்றுவதை முதல்வர் கருணாநிதி அப்போது விரும்பவில்லை. குடியரசுத் தினம், சுதந்திர தினத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் தானே செங்கோட்டையில் கொடி ஏற்றுகிறார். குடியரசுத் தலைவர் இல்லையே? அதேபோல் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் தானே தேசிய கோடி ஏற்ற வேண்டும். ஆளுநர் ஏன் ஏற்ற வேண்டும், என்று முதல்வர் கருணாநிதி அப்போது தெரிவித்தார்.

எப்படி?
இதற்காக பல்வேறு அறிக்கைகள், கடிதங்கள் என்று தொடர்ந்து அப்போது கருணாநிதி போராடி வந்தார்.இதற்காக 1974ல் இந்திரா காந்திக்கு கடிதமும் எழுதினார். முதலமைச்சர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்ற பிரதமர் இந்திரா காந்தி அந்த உரிமையை மாநில முதலமைச்சர்களுக்கு வழங்கினார். இதன் காரணமாக ஆகஸ்ட் 15ம் தேதி அதே வருடம் நாடு முழுக்க மாநில முதலமைச்சர்கள் கொடி ஏற்றினார்கள்.

கோட்டை
அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றிவிட்டு படியில் இறங்கி வந்த புகைப்படம் தேசிய அளவில் கவனம் பெற்றது. வெள்ளை உடையில்.. பின்னால் போலீசார் வர கருணாநிதி கொடி ஏற்றிவிட்டு நடந்து வருவார். கையில் தனது துண்டை பிடித்தபடி அவர் நடந்த வந்த புகைப்படம் மிகவும் பிரபலம். அதே இடத்தில் இன்று அவரைப்போலவே முதல்வர் ஸ்டாலினும் கொடி ஏற்றிவிட்டு நடந்து வந்தார்.

புகைப்படம்
அந்த புகைப்படமும் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இரண்டும் ஒரே மாதிரி இருப்பதாக திமுகவினர் நெகிழ்ச்சியாக தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டோவை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின், இந்தியர் எனும் பெருமை, அமைதி அறவழி காட்டிய அண்ணல் காந்தியடிகளையே சாரும்! மதவெறியர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டபோது, 'காந்தி தேசம்' எனப் பெயரிட வலியுறுத்தினார் பெரியார்! தலைவர் கலைஞர் பெற்றுத்தந்த உரிமையோடு, #IndiaAt75-ல் தேசியக் கொடியேற்றி, நம் தியாக வரலாற்றை நினைவுகூர்ந்தேன்!, என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications