“இதெல்லாம் பழைய ட்ரிக்.. பாத்தாச்சு!” பாஜக மீது முதல்வர் ஸ்டாலின் அட்டாக்
சென்னை: சென்னை வந்துள்ள இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசியதாவது, "இந்தியா கூட்டணி மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீது, மக்களாட்சி தத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்க கூடிய அத்தனை பேரும், உங்களைத்தான் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளரா ஏத்துக்கிட்டு இருக்காங்க. தென் மாநிலத்தைச் சார்ந்த இவருடைய ப்ரோபைலை எல்லோரும் கவனிக்கணும். உஸ்மானியா யூனிவர்சிட்டியில் சட்டம் பயின்று, 1971ல் வழக்கறிஞர் பயிற்சி செய்ய தொடங்கினர். பின்னர் ஆந்திர மாநில அரசு வழக்கறிஞராகவும், ஒன்றிய அரசோட கூடுதல் நிலை ஆலோசகராகவும், ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தினுடைய நீதிபதியாகவும், கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் முன்னேறி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்து இன்று குடியரசுத் துணைத் தலைவராக உயர்ந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட தன்னுடைய 60 ஆண்டு கால வாழ்வை சட்டம், நீதி ஆகியவற்றிற்காக அர்ப்பணித்து இருக்கிறார். இவர் நீதி அரசராக பணியாற்றிய காலத்தில் நேர்மையா, சுதந்திரமா செயல்பட்டு மக்களுடைய உரிமைகளையும் சமூகநீதியும் உயர்த்தி பிடித்து, அரசியலமைப்பு சட்டத்தின் மாண்பையும் போற்றி பாதுகாத்தவர். கோவா மாநில லோக் ஆயுக்தா தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ஏன் இன்னைக்கு தேவைப்படுகிறார் என்றால், அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்க பாஜக நினைக்கும் இந்த நேரத்தில், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்த நீதி அரசராக இவர் தேவைப்படுகிறார்.
சுதர்சன் ரெட்டி தமிழ்நாட்டுக்கும். தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கக்கூடியவர். அதுக்கு ஒரு எடுத்துக்காட்டுதான் புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி, 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்' நடத்துன மாநாட்டில் அவர் பேசுனது.
அவர் பேசுனது சுருக்கமாக சொல்லனும்னா, "இது திருவள்ளுவர், பாரதியார், பெரியார், கலைஞர் ஆகியோரின் மண். போராட்டக் குணத்தை எப்போதும் விடுவதில்லை. புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராடுவது நம்முடைய கடமை. இது இந்த தேசத்துக்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. இவர்கள் கொண்டு வர நினைக்கின்ற தேசிய கேள்விக் கொள்கை, மனித மாண்புகளுக்கு எதிரானது. 'நான், எனது, என்னுடையது' என்ற கலாச்சாரத்தை மட்டுமே இது உருவாக்கும். பன்முக தன்மையோ, கல்வியும் ஜனநாயக பரவலையோ இது உருவாக்காது என்று தன்னுடைய கருத்துக்களை பதிவு செஞ்சு தமிழ்நாட்டோட உணர்வுகளை உறுதியோடு வெளிப்படுத்தினார்.
இப்படி அரசியலமைப்பு சட்டத்துக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் முற்போக்குக்காகவும் மக்களுக்காகவும் பேசுகிற வரை நாம் நம்முடைய இதைவிட பெரிய காரணம் தேவையா?
ஆனா இவரை, மத்திய உள்துறை அமைச்சர் என்னென்ன சொல்கிறார்? நக்சல் என்று சொல்லுகிறார். ஒரு உள்துறை அமைச்சர் தன்னுடைய பொறுப்பை மறந்து ஒரு முன்னாள் நீதி அரசர் பத்தி அபாண்டமாக பேசியிருக்கிறார். அவங்களால தீவிரவாதத்தை ஒழிக்க முடியல. அந்த கையால் ஆகாத நிலையை மறைக்க நீதியரசர் மேல பழி போட்டு தப்பிக்க பாக்குறாங்க.
ஒன்றிய பாஜக என்ன செஞ்சுகிட்டு இருக்கு? அரசியல் எதிரிகளை பழிவாங்க புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்திட்டு இருக்கு. தன்னாட்சி அமைப்புகளை பாஜகவின் துணை அமைப்புகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. அரசியலமைப்பு சட்டமே ஆபத்தில இருக்கிறது. இந்த சூழல்ல இந்தியாவோட அடிப்படை கொள்கைகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சித்துவம், சமூக நிதி, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருத்தரா இன்றைக்கு சுதர்சன் ரெட்டி நமக்கு கிடைத்திருக்கிறார்.
பாஜக தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரான அத்தனை நடவடிக்கைகளையும் செஞ்சிட்டு, தமிழர் என்ற முகமூடி அணிந்து ஆதரவு கேட்கிறது. இதெல்லாம் ரொம்ப பழைய ட்ரிக்.
தனி மனிதர்களை விட தத்துவங்கள்தான் அரசியலை வழி நடத்தும். தனி மனிதர்கள் என்பவர்கள் வெறும் பிம்பங்கள்தான். அதனால எந்த கருத்தில் மக்களுக்கான மக்கள் நலனுக்கான கருத்தியலோ அதை்தான் ஆதரிக்க வேண்டும். எனவே சட்ட ரீதியாகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடின வாதாடிய தீர்ப்பு வழங்கிய சுதர்சன் ரெட்டி, இந்திய ஜனநாயகத்தையும், நாடாளுமன்ற மரபுகளையும், மக்களாட்சியையும், அரசியலமைப்பையும் காக்க குடியரசு துணைத் தலைவராக வெற்றி பெற்று வரணும்னு வாழ்த்துகிறேன்" என கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications