இலங்கை சென்ற பிரதமர், மீனவர்கள் கைது குறித்து எதுவும் பேசவில்லை.. சட்டசபையில் கொந்தளித்த ஸ்டாலின்!
சென்னை: இலங்கை சென்ற பிரதமர் மோடி கச்சத்தீவு, மீனவர்கள் கைது குறித்து பெரிய அளவில் முன்னெடுத்ததாக தெரியவில்லை என்றும் மத்திய அரசும், இந்திய பிரதமரும் நமது கோரிக்கையை புறக்கணிக்கிறார்கள் என்றும் இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடிய நிலையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்ந்த மானிய கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மீனவர் பிரச்சனை - ஸ்டாலின் பேச்சு
தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "இலங்கை கடற்படையால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது வருத்தமாக உள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதை தடுக்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.
பிரதமர் மோடி முன்னெடுக்கவில்லை
இலங்கை சென்ற பிரதமர் மோடி மீனவர் பிரச்சனை, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக எந்த முன்னெடுப்பும் எடுத்ததாக தெரியவில்லை. 97 மீனவர்களும் அவர்களின் படகுகளும் மீண்டும் தாயகம் திரும்பும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
மத்திய அரசுக்கு நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த போதிலும் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் தொடர்கிறது. மத்திய அரசு எப்படி நடந்து கொண்டாலும் நாம் மீனவர்களுடன் இருப்போம்" எனத் தெரிவித்தார்.
முக்கிய அறிவிப்புகள்
மேலும், தங்கச்சிமடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். மீனவர்களுக்காக ரூ.52 கோடியில் சிறப்பு திட்டம். கடல் பாசி வளர்ப்பு உள்ளிட்ட மீன்பிடி சார்ந்த தொழில்களுக்கு பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம். 7000 மீனவர்களுக்கு உபகரணங்களுடன் பயிற்சி அளிக்க ரூ.52 கோடி ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.
15,300 மீனவர்களுக்கு மீன் மற்றும் மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்ய பயிற்சி வழங்கப்படும். 14,700 பேருக்கு மீன்பிடி சாராத தொழில்களுக்கு பயிற்சி அளிக்க 53 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்படும். இதில் காளான் வளர்ப்பு, சுற்றுலா படகுகள் இயக்கம் உள்ளிட்டவை அடங்கும் என்றார்.
கச்சத்தீவு
தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெறுவதற்கான அரசின் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், மீனவர்கள் விவகாரத்தில் பாஜக அரசு இதுவரை ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கை கடற்படை நாள் ஒன்றுக்கு 2 மீனவர்கள் வீதம் கைது செய்கிறது. கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் 530 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க 74 முறை கடிதங்கள் எழுதியுள்ளேன்.
தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களை போக்கிடவும் கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும். இதனை கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
அரசு முறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் உள்ள நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.












Click it and Unblock the Notifications