கீழடி விவகாரம்.. தமிழ் என்றாலே கசப்பு.. பிரதமருக்கு ஒரு ட்வீட் போடக்கூட மனமில்லை.. முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கீழடி ஆய்வறிக்கை மத்திய அரசு வெளியிடாமல் இருப்பது தமிழ்நாட்டில் மிகப்பெரிய விவாதமாக மாறி இருக்கிறது. கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாமல், கூடுதல் ஆதாரங்கள் தேவை. ஒரேயொரு கண்டுபிடிப்பு எல்லாவற்றையும் மாற்றிவிடாது என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறி இருக்கிறார். ஆனால் பல ஆண்டுகளாக ஆய்வறிக்கையை வெளியிடாமல் இருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இதனால் கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாமல் உள்ள மத்திய அரசை கண்டித்து மதுரை திமுக மாணவரணி சார்பாக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. அதேபோல் சென்னையிலும் திராவிடர் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஏராளமானோர் மத்திய அரசை கண்டித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வுகள் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கையை மத்திய பாஜக அரசு திட்டமிட்டுப் புறக்கணித்து, திருப்பி அனுப்பியதற்கான எதிர்வினைதான் கழக மாணவரணியின் மாபெரும் ஆர்ப்பாட்ட அணிவகுப்பு. கீழடியில் நடந்த அகழாய்வுகள், தமிழர்களின் நாகரிகம் தனித்துவமான நாகரிகம் என்பதையும், தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது என்பதையும் ஆதாரப்பூர்வமாக மெய்ப்பித்த அகழாய்வாகும்.
வைகை ஆற்றங்கரை
கீழடி குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதி எச்சரித்தது போலவே, தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக்கூடிய மத்திய பாஜக அரசு, கீழடி அகழாய்வுகளில் வெளிப்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 2013ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்தியத் தொல்லியல் துறையால் வைகை ஆற்றங்கரையில் தள ஆய்வு நடத்தப்பட்டு, கீழடி ஒரு முக்கிய குடியிருப்புத் தளம் என அடையாளம் காணப்பட்டது.
3 கட்டங்களோடு நிறுத்திய மத்திய அரசு
அதன் பின்னர் அகழாய்வு தொடர்ந்த நிலையில் மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 3 கட்டங்களோடு கீழடி அகழாய்வை நிறுத்திக் கொண்டது. மீதமிருந்த 7 கட்டங்களையும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்டது. தொல்லியல் பணிகளை மேற்கொண்ட இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை அசாம் மாநிலத்திற்கு இடமாறுதல் செய்து தமிழ்ப் பண்பாட்டின் மீதான வெறுப்புணர்வை பாஜக அரசு அப்பட்டமாகக் காட்டியது.
அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணிகள்
எனினும், அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் 2016-இல் கீழடி அகழாய்வு குறித்த தொடக்க அறிக்கையையும், 2017-ஆம் ஆண்டில் இடைநிலை அறிக்கையையும் இந்திய அரசின் தொல்லியல் துறையிடம் வழங்கினார். சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு அவர் மீண்டும் வந்து பணியாற்றினார். கீழடி அகழாய்வின் வாயிலாகத் தமிழர்களின் வைகை ஆற்று நாகரிகம் ஏறத்தாழ 2500 ஆண்டுகள் முதல் 3000 ஆண்டுகள் வரை பழமையானது என்பது தெளிவாகிறது.
கீழடி ஆய்வறிக்கை
இது வெறும் கருத்துரீதியான தகவல் அல்ல. கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களை வகைப்படுத்தி உள்நாட்டிலும் - உலகளவிலும் உள்ள சிறந்த ஆய்வுக்கூடங்களான புனே, பெங்களூரு, அமெரிக்காவின் புளோரிடா மற்றும் இத்தாலி ஆகியவற்றுக்கு அனுப்பி அங்கு ராயல் டெஸ்டிங், கெமிக்கல் டெஸ்டிங், கார்பன் டேட்டிங் உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொண்டு அறிவியல்பூர்வமாக முடிவுகள் பெறப்பட்டு, அதனடிப்படையிலேயே 2023-ஆம் ஆண்டு 982 பக்க இறுதி அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா சமர்ப்பித்தார்.
சரஸ்வதி நாகரிகத்தை நிரூபிக்கவில்லை
இத்தனை ஆய்வுகள், அறிவியல்பூர்வமான முடிவுகள் கிடைக்கப்பெற்றும், கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் காலந்தாழ்த்தி, தமிழரின் பண்பாட்டுப் பெருமையை மறைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசு, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரண்டாண்டுகள் கடந்த நிலையில், கூடுதல் சான்றுகள் தேவை என்று திருப்பியனுப்பியிருக்கிறது. இது தமிழ்ப் பண்பாட்டின் மீதான பாஜக அரசின் அப்பட்டமான தாக்குதல். தரவுகள் எதுவுமில்லாத கற்பனையான சரஸ்வதி நாகரிகத்தை முன்னிறுத்தி, திராவிடப் பண்பாட்டு அடையாளமான சிந்துவெளி நாகரிகத்தை அழிக்க நினைக்கும் பாஜக, இதுவரை சரஸ்வதி நாகரிகத்தை எந்தவித அறிவியல் சோதனைகள் மூலமாகவும் நிரூபிக்கவில்லை.
வாய் திறக்காத அதிமுக
ஆனால், தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள் ஒவ்வொன்றும் உலகத் தரத்திலான அறிவியல்பூர்வமான ஆய்வுக்குட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும் கூட அதனை ஏற்பதற்குப் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு மனது வரவில்லை. அந்தளவுக்குத் தமிழினத்தின் மீதான வெறுப்பு அந்தக் கட்சியின் கொள்கைகளில் ஊறிக் கிடக்கிறது. அகழாய்வுகள் நடத்தப்பட்டபோது அதிமுக ஆட்சி நடைபெற்றது. ஆனால், கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் மத்திய பாஜக அரசின் மொழிவெறி - இனவெறி நடவடிக்கை பற்றி அதிமுக இதுவரை வாய் திறக்கவில்லை.
பாரத நாகரிகம்
அதிமுகவை பாஜகவிடம் அடகுவைத்த பழனிசாமி எப்படி வாய் திறப்பார்? ஏற்கனவே அவருடைய அமைச்சரவையில் இருந்த ஒருவர், தமிழர் நாகரிகமான கீழடியை 'பாரத நாகரிகம்' என்று பாஜக மனம்குளிரும் வகையில் விளம்பியவராயிற்றே! தமிழ் மொழி - பண்பாடு - தமிழர் பெருமையைப் போற்றிப் பாதுகாப்பதில் எப்போதும் முன்னணியில் நிற்கும் திமுக ஆட்சியில்தான் கீழடியில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு, அகழாய்வில் கிடைத்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
ட்வீட் கூட போடாத பிரதமர்
தமிழ்ப் பண்பாட்டின் காலம் 5300 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை கொண்டதாக இருப்பதை இரும்பின் தொன்மை என்ற பன்னாட்டுத் தரத்திலான ஆய்வுகள் வாயிலாக நிரூபித்துள்ளோம். வரலாற்றுப் பெருமை மிக்க அந்த ஆய்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டது. தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது. தமிழ்மொழி இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இருக்கிறது. தமிழர்கள் இந்திய குடிமக்களாக வாழ்கிறார்கள். ஆனால், தமிழ்ப் பண்பாட்டின் பெருமைக்குரிய இரும்பின் தொன்மை முடிவுகள் குறித்து ஒரு 'ட்வீட்' போடக்கூட பிரதமர் தொடங்கி பாஜக ஆட்சியினருக்கு மனம் வரவில்லை.
தமிழர்களுக்கு துரோகம்
தமிழ்நாடு பாஜகவினரும் தங்கள் இன - மொழி உணர்வைப் பதவிக்காகத் தலைமையிடம் விற்றுவிட்டு, தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைக் காக்கவும், அதை நிறுவவும் வேண்டிய பெரும் பொறுப்பு திமுகவிற்கும், தமிழுணர்வுகொண்ட அதன் தோழமை சக்திகளுக்கும் மட்டுமே இருப்பதால்தான், கிளம்பிற்று காண் தமிழர் கூட்டம் என்கிற வகையில் கழக மாணவரணி மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி, கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. கீழடியிலும் சென்னையிலும் ஒலித்திருப்பது முதல் கட்ட முழக்கம். இது டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும். தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை கழகத்தின் போராட்டம் ஓயவே ஓயாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
புதுச்சேரி தேர்தல்.. முதல்வர் ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு.. முடிவுக்கு வருமா தொகுதி பங்கீடு?












Click it and Unblock the Notifications