மதநல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிப்பவர்கள் மீது தயவு பார்க்காமல் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி
சென்னை: மதநல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சணையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர்கள்- காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஒருங்கிணைந்த மாநாடு இன்று தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் உள்ள அரங்கில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற மாநாடு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
இது வரும் 12 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள் கலந்து கொண்ட மாநாட்டில் பேசியிருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் இந்த அரசு பொறுப்பேற்று 10 மாதங்கள் ஆகியிருக்கின்றன. இரு கொரோனா அலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு அதற்கு முற்றுப்புள்ளியும் வைத்திருக்கிறோம். அதற்கு உங்களுடைய ஒத்துழைப்புதான் முக்கியமான காரணமாக அமைந்தது. தடுப்பூசி செலுத்துவது எனும் மாபெரும் மக்கள் இயக்கம் வெற்றி காணக் கூடிய அளவிலே உழைத்தது நீங்கள் என்பதை எண்ணி பார்க்கிற போது நீங்கள் அளித்த உழைப்பு மெச்சத்தக்கது- பாராட்டுக்குரியது. வரலாறு காணாத கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்ட போது அந்தந்த மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களும் இரவு பகல் பாராது பணியாற்றியிருக்கிறீர்கள். இவற்றுக்கெல்லாம் எனது பாராட்டுகளை மனதார தெரிவித்துக் கொள்கிறேன்.

70 சதவீதம்
500-க்கும் அதிகமான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு நாங்கள் வழங்கியிருக்கிறோம். அவற்றுள் 70 சதவீதத்திறகும் அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்று 7 தொலைநோக்குக் குறிக்கோள்களை அறிவித்தோம். அவற்றுக்கான செயல்திட்டங்களையும் வகுத்து நிறைவேற்றி வருகிறோம். அந்தக் குறிக்கோள்களை அடைய மாநிலப் பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்தோம்.

மாநில வளர்ச்சிக் கொள்கை
மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவை உருவாக்கினோம். நிதி நுட்பக் கொள்கையை வகுத்தோம். இந்த திராவிட மாடல் அரசின் முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு நிர்வாகச் சக்கரத்தைச் சரியான திசையில் மக்கள் பயனடையக் கூடிய திசையில் திருப்பினோம். இந்தியாவுக்கே முன்னோடித் திட்டங்களாக விளங்கக் கூடிய மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 - இப்படி மக்கள் நலனுக்காக நாம் தீட்டியுள்ள அனைத்துத் திட்டங்களும் கடைகோடியில் வாழக் கூடிய மனிதரையும் சென்றடையத் தேவையான நடவடிக்கைகளை இந்த 10 மாதங்களில் எடுத்து தமிழகத்தின் நிர்வாகத்தை இந்திய அளவிலே தலைநிமிரச் செய்திருக்கிறோம்.

புதிய முதலீடுகள்
புதிய முதலீடுகள் வருவதற்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைப்பதற்கும் அதன் வழியாக நாம் விரும்பும் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் இலக்கை அடைந்து மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யவும் சட்டம் ஒழுங்கு மிக மிக முக்கியமாகும். தமிழகத்தில் எப்போது சட்டம், ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு விஷயத்திலே நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். அதை நீங்கள் அனைவரும் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

மத நல்லிணக்கத்திற்கு ஊறு
குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்களை இந்த அரசு ஒரு போதும் அனுமதிக்காது. மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கக் கூடிய வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாயத்தில் அமைதி நிலவுவதை உறுதி செய்யக் கூடிய வகையில் சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் மிகுந்த கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காவல் துறை ஈடுபட்டு வருகிறது. நாசகார சக்திகள் எந்த வடிவிலும் தலைதூக்க நாம் அனுமதித்துவிடக் கூடாது.
Recommended Video

கட்டப்பஞ்சாயத்து
கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, மோசடி, நில அபகரிப்பு போன்ற பொதுமக்களை பாதிக்கக் கூடிய செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கலை ஒடுக்குவதில் காவல் துறை எந்த பாரபட்சமும் காட்டக் கூடாது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கிற்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடிய சமூகவிரோத சக்திகளை கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். நீங்கள் உருவாக்கும் அமைதியில்தான் அனைத்தும் அடங்கி இருக்கிறது என்றார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications