ஆளுநருக்கு பவரே கிடையாது! நாம் அனுப்பியதை டெல்லிக்கு அனுப்புவது தான் ரவியின் வேலை! ஸ்டாலின் விளாசல்!
சென்னை: ஆளுநருக்கு பவரே கிடையாது என்றும் நாம் அனுப்பியதை டெல்லிக்கு அனுப்புவது தான் அவரது வேலை எனவும் பேசியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட நீட் விலக்கு மசோதாவை அ.தி.மு.க.கூட ஆதரித்ததாக தெரிவித்துள்ளார். சென்னையில் திருமண விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;

ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்தில் பிறந்திருப்பவர்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பெறும் மதிப்பெண்ணைப் பெற்று மருத்துவராக வரும் வாய்ப்பு இருந்தது. இப்போது நீட் எழுதினால்தான், அதிலிருந்து தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவராக வர முடியும் என்று நிலை இன்றைக்கு வந்திருக்கிறது.
தேர்தல் நேரத்தில் "நாம் ஆட்சிக்கு வருகிறபோது அது நிச்சயமாக நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றுகிற முயற்சியில் நாம் முழுமையாக ஈடுபடுவோம். அதை எதிர்ப்போம். அதை ரத்து செய்வதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவோம்" என்று நாம் தெளிவாக எடுத்துச் சொன்னோம். ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு சட்டமன்றத்தில், தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் நீட் விலக்கு வேண்டுகிறோம் என்று சொல்லி தீர்மானத்தை கொண்டு வருகிறோம். எல்லா கட்சிகளும் ஆதரித்தது.
இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.கூட நாம் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து, அனுப்பி வைத்தோம். கவர்னரிடத்தில் இருந்தது. அதை அனுப்பாமல் அப்படியே ராஜ்பவனில் வைத்திருந்தார். அதற்கு பிறகு அதை கடுமையாக எதிர்த்தோம். அதை வலியுறுத்தினோம், வற்புறுத்தினோம். அதற்குப் பிறகு இரண்டாவது முறையாக அதை மீண்டும் சட்டமன்றத்திற்கு query போட்டு அனுப்புகிறார் இப்போது இருக்கும் கவர்னர். எனவே அந்த சந்தேகங்களுக்கு எல்லாம் விளக்கம் சொல்லி மீண்டும் அவருக்கு அனுப்பி வைக்கிறோம். இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்பட்டதற்கு பிறகு, அது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இப்போது அது ஜனாதிபதியிடம் இருக்கிறது. எனவே அதன்மீது முடிவு செய்ய வேண்டியது ஜனாதிபதிதான். ஒன்றிய அரசு அறிவுரையைப் பெற்று, ஆலோசனை பெற்ற பிறகு, ஜனாதிபதிதான் அதற்கு ஒப்புதல் தர வேண்டும். ஆளுநருக்கு எந்த பவரும் இல்லை. நாம் அனுப்பியதை அனுப்பி வைக்கும் வேலைதான் அவருக்கு.
ஆனால் திடீரென்று சில நாட்களுக்கு முன்பு, நீட்டில் தேர்வு பெற்ற மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் அழைத்து உட்கார வைத்து ஒரு கலந்துரையால் நடத்தி இருக்கிறார். அப்போது நடத்துகிற போது சேலம் உருக்காலையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு தோழர், அவர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவருடைய மகள் அதில் தேர்வு பெற்று உள்ளார். ஒன்றிய அரசின் ஊழியராக இருப்பவர், அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துக்களை கேட்கிறபோது வெளிப்படையாக தைரியமாக, துணிச்சலோடு எதைப் பற்றியும் கவலைப்படாமல் "என்னுடைய மகள் பாஸ் பண்ணி விட்டாள், எனக்கு வசதி இருந்தது அவள் பாஸ் செய்து விட்டாள்.
ஆனால் பல மாணவர்கள் அந்த நேற்று தேர்வில் வெற்றி பெற முடியாத சூழ்நிலை ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் நிலை எல்லாம் என்ன ஆகும். தயவு செய்து இந்த நீட்டிற்கு விலக்கு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்" என்று கவர்னரிடத்தில் கேட்டபோது, கொதித்து எழுந்துக் கோபம் அடைந்தவர் என்ன பேசியிருக்கிறார் தெரியுமா? "அது எல்லாம் முடியாது." அவருக்கு பவரே கிடையாது. ஆனால் இருந்தாலும் அவர் சொல்கிறார், "நான் அனுப்பி வைத்துவிட்டேன். இருந்தாலும், என்னிடத்தில் அது இருந்தால், நான் கொடுக்க மாட்டேன் - அதை அனுமதிக்க மாட்டேன்" என்று வெளிப்படையாகச் சொன்னார் என்றால், இதை எல்லாம் கண்டித்துதான் அந்த நீட்டுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான், இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications