பழைய ஓய்வூதிய திட்டம்! நாளை நல்ல அறிவிப்பை வெளியிடும் ஸ்டாலின்! பூரித்த அரசு ஊழியர் சங்கம்
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நாளை நல்லதொரு அறிவிப்பை வெளியிடுகிறார் என போட்டா ஜியோ அமைப்பினர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் எ.வ.வேலு இந்த தகவலை தெரிவித்தார்.
23 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்திருந்தது. இந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசு ஊழியர்கள் - ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புகளான போட்டா ஜியோ- ஜாக்டோ ஜியோ ஆகிய அமைப்புகள் அறிவித்திருந்தன.

இந்த நிலையில் இன்றைய தினம் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினருடன் தனித்தனியே அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். முதலில் போட்டா ஜியோவுடன் காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கி முடிந்தது.
இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தை குறித்து போட்டா ஜியோ அமைப்பினர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: பழைய ஓய்வூதியம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நாளை நல்ல அறிவிப்பை வெளியிடுவார்.
23 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் நாளை எங்கள் கோரிக்கை அமல்படுத்தப்படும். எங்களது கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications