நல்லா சாப்டுங்க! மேலும் 500 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்.. தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
அரசு பள்ளி மாணவர்களின் கற்றலை ஊக்குவிக்கும் வகையிலும், ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்க்கவும், பாதியில் படிப்பை கைவிடுவதை தடுக்கவும் காலை சிற்றுண்டி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
சென்னை: தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டத்தை மேலும் 500 பள்ளிகளில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க இருக்கிறார். நாளை மார்ச் 1 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் உள்ள பள்ளிகளில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து இருக்கிறார்.
ஏராளமான ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குழந்தைகள் கல்வி கற்று சமுதாயத்தில் உயர் பதவிகளை அலங்கரிக்க முக்கிய காரணமாக திகழ்ந்து வருவது மதிய உணவுத் திட்டம். இது தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் ஆட்சி காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மதிய உணவுத் திட்டம் தற்போது இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் முதலமைச்சர்களாக இருந்த காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரால் இந்த மதிய உணவு திட்டம் பல்வேறு வகைகளில் தரம் உயர்த்தப்பட்டது.

காலை உணவு திட்டம்
இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று அறிமுகம் செய்தார். கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி சட்டமன்றத்தில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டபோதே வரவேற்பு அதிகரித்தது.

ஏழை குழந்தைகளுக்கு பயன்
கூலித் தொழிலுக்கு செல்லும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு இந்த காலை சிற்றுண்டி திட்டம் பெரும் வாய்ப்பாக அமையும் என்றே கூறப்பட்டது. இந்த பல்வேறு கட்டங்களாக இந்த காலை சிற்றுண்டி திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மேலும் 500 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

அறிமுகம் செய்த ஸ்டாலின்
அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையிலும், ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்க்கவும், பாதியிலேயே படிப்பை கைவிடுவதை தடுக்கவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். அதன் அடிப்படையில் 1,547 அரசு ஆரம்ப பள்ளிகளில் முதல்கட்டமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

1.14 லட்சம் மாணவர்கள்
இதன் மூலம் 1,14,095 மாணவர்கள் பயனடைந்தனர். இதற்காக ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மதுரையில் இதனை தொடங்கி வைத்த ஸ்டாலின் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்த திட்டம் பெற்றோர், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

சென்னையில் அடுத்த கட்டம்
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய அரசு முடிவெடுத்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை மார்ச் 1 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் உள்ள 500 பள்ளிகளில் இந்த காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
