அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்- ஸ்டாலின் வார்னிங்
சென்னை: தமிழகத்திற்கு நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளதால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடதமிழக கடற்கரையை நோக்கி டிட்வா புயல் மேற்கு நோக்கி மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் டிட்வா புயல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: #CycloneDitwah பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.
தேசிய பேரிடர் மீட்பு படை
16 #SDRF படைகளும் 12 #NDRF படைகளும் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
திட்டமிடுங்கள்
அனைத்துத் துறைகளும் முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்திட வேண்டும்! பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையினைப் பின்பற்றி, அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிட்வா புயல்
டிட்வா புயலின் எதிரொலியாக சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று, அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.
திமுக நிர்வாகிகள்
அது போல் டிட்வா புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் திமுக நிர்வாகிகள் மக்களுக்கு உதவ தயாராக இருக்கவும் முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள கடந்த இரண்டு நாட்களாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுடன் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வந்த நிலையில், "டிட்வா புயல்" எதிர்கொள்ள அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டுள்ளதோடு, மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உரிய அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.
அரசாங்கம்
மழையை எதிர்கொள்ள அரசாங்கம் முழு அளவில் தயாராக உள்ளது என்றாலும், ஒருவேளை இயற்கை வழக்கத்திற்கு மாறாகப் பெருமழைப்பொழிவை ஏற்படுத்தினாலும் சரியான முன்னெச்சரிக்கையுடன் பதற்றமில்லாமல் மழைக் காலத்தை எதிர்கொள்வோம். பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில் கழகமும் களத்தில் துணையாக நிற்க வேண்டும் என கழக உடன்பிறப்புகள் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழகச் செயலாளர்களைத் தயார் நிலையில் இருக்கும்படி காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் அறிவுறுத்த வேண்டும். கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளிலேயே முழுமையாக இருந்து மக்களுக்கு உதவிட வேண்டும்.
மழைக்காலத்தில்
மழைக்காலத்தில் கழகத்தினர், பொதுமக்கள் - தன்னார்வலர்களுடன் இணைந்து பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கித் தருவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வைத்துக் கொள்வது அவசியம். குடிநீர், பால் ஆகிய இரண்டும் மிக அவசியமான தேவையாக இருக்கும். எனவே தங்கள் பகுதிகளில் அவை தடையின்றிக் கிடைக்கின்றனவா என்பதைக் கண்காணித்து, தேவையான ஏற்பாடுகளைச் செய்து தரவும், ஆங்காங்கே நடைபெறும் மீட்பு பணிகளிலும் உதவிடவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications