ஆளுநர் விவகாரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு! சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் உரை
சென்னை: 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது வரவேற்கத்தக்கது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இது தமிழகம் மட்டுமில்லை ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுக்கும் கிடைத்த தீர்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழக சட்டபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது , துணை வேந்தர்கள் நியமனத்தில் குறுக்கீடு உள்ளிட்டவைகளை முன்வைத்து இந்த வழக்கு தொடரப்பட்டது.

இதன் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது மாநில சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பினால் மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும் போது குடியரசுத் தலைவரக்கு அனுப்ப அதிகாரம் இருக்கிறதா? மாநில அரசின் அதிகாரத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட மசோதாக்களை மட்டுமே அனுப்ப முடியுமா?
அனைத்து மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்க இயலுமா? உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை. அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. தமிழக அரசின் 10 மசோதாக்களை நிறுத்தி வைத்து குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டவிரோதம் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் இந்த தீர்ப்பை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். அவர் பேசுகையில் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை நிலைநாட்ட தமிழகம் தொடர்ந்து போராடும். தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுக்கு கிடைத்த தீர்ப்பு.
ஆளுநர் விவகாரத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது. தமிழக அரசின் வாதத்தில் இருந்த நியாயத்தை ஏற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
