கடைசியாக ஒருமுறை கேப்டன் முகத்தை பார்க்க! நேராக விஜயகாந்த் முன் நின்று விடைகொடுத்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் நிகழ்விலும் பங்கேற்றார் முதல்வர் ஸ்டாலின். நேற்று விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதியாக தனது நண்பருக்கு விடை கொடுப்பதற்காக இன்றும் நேரில் சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அப்பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் போலீசார் மிரண்டனர்.

இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக, விஜயகாந்த்தின் உடல் இன்று காலையில் தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மதியம் 2.30 மணியளவில் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு வந்தடைந்தது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற விஜயகாந்த் இறுதிச் சடங்கு நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஏராளமான அரசியல் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இறுதிச் சடங்கு நிகழ்வில் விஜயகாந்த்தின் குடும்பத்தினர், உறவினர்கள் என 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

விஜயகாந்தின் உடல் மருத்துவமனையிலிருந்து அவருடைய சாலிகிராமம் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டதுமே, முதல் ஆளாகச் சென்று மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது முக்கிய பிரமுகர்களும் உடன் சென்றனர். அப்போது பிரேமலதா, சுதீஷிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர சொல்லியிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
பின்னர், அமைச்சர்கள், பிரேமலதா தரப்போடு தொடர்ந்து பேசி வேண்டிய உதவிகளைச் செய்து வந்தனர். நேற்று மாலை முதல் கோயம்பேட்டில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால் தீவுத் திடலுக்கு கொண்டு செல்வது பற்றியும் தமிழக அரசு ஆலோசித்து, பிரேமலதா குடும்பத்தினரின் ஒப்புதலைப் பெற்று, அதன்படியே இன்று காலையில் தீவுத் திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது விஜயகாந்த் உடல்.
கேப்டன் விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் வந்தடைந்ததும், ஓ.பன்னீர்செல்வம், ஜிகே வாசன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் வந்து மரியாதை செலுத்தினர். பின்னர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்ம் அமைச்சர்கள் பட்டாளத்துடன் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
விஜயகாந்த்தின் இறுதிச் சடங்கில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகத்தான் முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம், மக்கள் வெள்ளத்திற்கிடையே மிதந்து வந்த காட்சியை தொலைக்காட்சிகளின் வாயிலாக கண்ட முதல்வர் ஸ்டாலின், தானும் இறுதியாக விஜயகாந்த்தை நேரில் பார்த்து விடை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அங்கு செல்லத் தீர்மானித்தாராம்.
அதன்படியே, திமுக பொருளாளர் டிஆர் பாலு, அமைச்சர்கள் கேஎன் நேரு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், உள்ளிட்டோருடன் தேமுதிக அலுவலகத்திற்குச் சென்று, விஜயகாந்த்தின் இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்வில், வருத்தம் தோய்ந்த முகத்துடன் இறுகிப்போய் காணப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.

நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், "குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர். தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் தலைவர் கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளர் நண்பர் விஜயகாந்த். தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த் அவர்களுடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த 'மக்கள் ஆணையிட்டால்' என்ற படத்தில், கலைஞர் எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது. அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது" என உருக்கமாகத் தெரிவித்திருந்தார்.
இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்ற புகைப்படங்களை ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், "எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே.." என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications