Sorry சொன்ன முதல்வர்.. தமிழகத்தில் இதுதான் சட்டம் ஒழுங்கின் லட்சணம் - இன்பதுரை விமர்சனம்
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்பதற்கு முதல்வரின் சாரி என்ற வார்த்தையே போதுமானது. சாரி என்ற வார்த்தைக்கான நன்மதிப்பே போய்விட்டது என்று அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை விமர்சனம் செய்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர் செல்வானந்தம். இவர் மக்காச்சோள வியாபாரமும் செய்து வந்துள்ளார். பழனியில் உள்ள ஒரு நிறுவனத்திடம் மக்காச்சோளத்தை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். அந்த நிறுவனத்தினருக்கும், செல்வானந்தத்துக்கும் இடையே ஏற்கனவே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், செல்வானந்தம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். செல்வானந்தம் கடைசியாகப் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது. வியாபாரத்தில் இருந்து வந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனையில் திமுக நிர்வாகிகள் தலையிட்டு தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதிமுக வழக்கறிஞரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான இன்பதுரை, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் அலுவலகத்தில் இது தொடர்பாக இன்று புகார் மனு ஒன்றை அளித்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி செல்வானந்தத்தின் கடைசி ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்வானந்தத்தை இந்த தற்கொலை நிலைக்குத் தள்ளிய திமுக நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி உள்துறை செயலாளர் அலுவலகத்தில் மனு அளித்தோம்.
காவல்துறை நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் உள்துறை செயலாளர் வரை செல்ல வேண்டிய நிலையே உள்ளது. எக்ஸ் தளத்தில் பதிவு போட்டவர்கள் மீதெல்லாம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்கின்றனர். ஆனால், தற்கொலை செய்து கொண்டவரின் ஆடியோ ஆதாரம் இருந்தும் இந்த சம்பவத்தில் இதுவரை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.
செல்வானந்தம் காவல் துறையில் இந்த பிரச்சனை குறித்து காவல் துறையில் புகார் அளித்தாரா எனத் தெரியவில்லை. காவல் துறையிடம் அவர் புகார் கொடுத்திருந்தாலும் நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார்கள். எனக்குத் தெரிந்து நிகிதா தந்த புகாரில் மட்டும் தான் திமுக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்தில் உள்ளது என்பது முதல்வரின் சாரி-யில் தெரிந்துவிட்டது. சாரி என்ற வார்த்தைக்கான நன்மதிப்பே போய்விட்டது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications