நாளை அக்னி பரீட்சை.. இன்று விஜய் நடத்திய முக்கிய மீட்டிங்! யாருக்கு என்ன இலாகா? பரபரக்கும் முதல்வர்
சென்னை: நாளைய தினம் விஜய் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளவிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க பட்ஜெட் தொடர்பாக விஜய் முக்கியமான ஆலோசனைகளில் இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொது பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்திருக்கிறார் விஜய். மேலும், நாளைக்கு பெரும்பான்மையை நிரூபித்து விட்டு அமைச்சரவை விரிவாக்கமும், அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு வழங்குவது குறித்தும் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழக அரசியலில் விஜய் தனது முதல் அக்னிப் பரீட்சையைச் சந்திக்கத் தயாராகிவிட்டார். நாளை (புதன்கிழமை) சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள விஜய், அதற்கு முன்பாகவே தனது அமைச்சரவையை வலுப்படுத்தும் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு
தற்போது அதிமுகவின் ஒரு பிரிவினர் மற்றும் இதர கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் சுமார் 150 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை விஜய் பெற்றுள்ளார். இதனால் நாளைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வது விஜய்க்கு பெரிய விஷயமாக இருக்காது. இதற்கிடையே விஜய் அடுத்தகட்டப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
யாருக்கு என்ன இலாகா!
விஜய்யுடன் மொத்தம் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில், அவர்களுக்கு இலாகாக்களை ஒதுக்குவது மற்றும் புதிய அமைச்சர்களைச் சேர்ப்பது குறித்து அதிகாரிகளுடனும் தனது 'கோர் டீம்' உடனும் அவர் விரிவான ஆலோசனைகளை நடத்தியுள்ளார். குறிப்பாக, நிர்வாக அனுபவம் மிக்க செங்கோட்டையன் போன்றவர்களுக்கும், மாஜி ஐஆர்எஸ் அதிகாரியான அருண்ராஜ், கட்சிப் பணிகளை எடுத்துச் செய்த புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்றவர்களுக்கும் எந்தெந்த துறைகளை ஒதுக்கினால் சரியாக இருக்கும் என்பதில் விஜய் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகத் தெரிகிறது.
பட்ஜெட்
மேலும், பொது பட்ஜெட் குறித்த ஆலோசனையிலும் அவர் ஈடுபட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தான் தாக்கல் செய்திருந்தது. இப்போது விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், அவரது அரசு விரைவில் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. அது தொடர்பாகவும் ஆலோசனைகளில் விஜய் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய் அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்டில் முக்கியமான வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பு இருக்கும் என தெரிகிறது. குறிப்பாக 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் பெண்களுக்கு நிதி உதவி போன்ற திட்டங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நாங்கள் சொன்னதைச் செய்வோம் என்ற இமேஜை காப்பாற்ற.. முதல் பொது பட்ஜெட் அவருக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதால், அதிகாரிகளிடம் இது குறித்து மிகத் தீவிரமான ஆலோசனைகளைப் பெற்று வருகிறார்.
அமைச்சரவை
இது ஒரு பக்கம் இருக்க.. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் திரும்பியுள்ள எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக அணிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. லீமா ரோஸ் போன்றவர்கள் திரைக்குப் பின்னால் இந்த உடைப்பை ஒருங்கிணைத்த நிலையில், ஆட்சியின் நிலைத்தன்மைக்காக அதிமுக அதிருப்தியாளர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்படலாம் என்றும் கோட்டை வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது..
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற கையோடு, தனது விரிவுபடுத்தப்பட்ட புதிய அமைச்சரவை மற்றும் இலாகாக்கள் குறித்த அறிவிப்பை விஜய் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது!












Click it and Unblock the Notifications