வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கிய முதல்வர் விஜய்.. தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் நேற்று நடைபெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மிகப்பெரிய நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் வெற்று வெள்ளைத் தாள்களில் கையெழுத்து பெறப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல் கசிந்துள்ளது. கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யாரேனும் செயல்பட்டாலோ அல்லது கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்டாலோ, அதனை உடனடி ராஜினாமா கடிதமாக பயன்படுத்தி அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை கையெழுத்துப் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

vijay tvk

வரம்பு மீறினால் உடனடி பதவி பறிப்பு!

சமீப நாட்களாக ஆளுங்கட்சிப் பிரதிநிதிகள் மீது எழுந்துள்ள தொடர் சர்ச்சைகள் முதல்வர் விஜய்யைக் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளன. குறிப்பாக, துறையூர் தொகுதியில் குடிநீர் பிரச்சினை குறித்து முறையிட வந்த வாக்காளரைத் தாக்கியதாகப் புகாருக்குள்ளான துணை சபாநாயகர் எம். ரவிசங்கர் மற்றும் கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் ஆகிய இருவரிடமும் கூட்டத்தில் தனியாக விளக்கம் கேட்கப்பட்டது.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற அதிகாரத் திமிரிலோ, பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் அத்துமீறும் செயல்களிலோ யாரேனும் ஈடுபட்டால், எந்தவித விசாரணையுமின்றி அவர்களின் பதவியைப் பறிக்கத் தலைமை தயங்காது என்பதை உணர்த்தவே இந்த வெற்றுத் தாள் கையெழுத்து வியூகம் கையாளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நவம்பர் 13 கெடுவும், நம்பிக்கை இல்லாத் தீர்மான அச்சமும்

கடந்த மே 13-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்து விஜய் அரசு வெற்றி பெற்றது. சட்டமன்ற விதிகளின்படி ஆறு மாத கால இடைவெளி நாளை (நவம்பர் 13) நிறைவடைவதால், அதற்குப் பிறகு எந்த நேரத்திலும் எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர வாய்ப்புள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட்ட காவல் உயரதிகாரிகளுடனும், அதன்பிறகு மாமல்லபுரத்தில் எம்.எல்.ஏ.க்களுடனும் முதல்வர் விஜய் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தினார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் டெல்லி ஆதரவுடன் இணைந்து தவெக எம்.எல்.ஏ.க்களைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

₹60 முதல் ₹70 கோடி வரை பேரம்

ஏற்கனவே தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க இடைத்தரகர்கள் மூலம் ரூ. 60 கோடி முதல் ரூ. 70 கோடி வரை ஆஃபர் கொடுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியிருந்தார். கரூரைச் சேர்ந்த ஒரு குழு நேரடியாக நேரில் சந்தித்துப் பேரம் பேசுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனை முறியடிக்கவே, மாமல்லபுரம் கூட்டத்தில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களைத் தனித்தனியாக அழைத்து 1 முதல் 2 நிமிடங்கள் வரை விஜய் பேசினார். பண ஆசைக்கு அடிபணிந்து கட்சி மாறினால் உங்கள் அரசியல் வாழ்க்கை அழிந்துவிடும்; கட்சியோடு உறுதியாக இருந்தால் சிறந்த எதிர்காலம் உண்டு என அவர் அறிவுறுத்தினார்.

தொலைக்காட்சியில் வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் கன்ஃபெஷன் ரூமிற்குள் சென்று பேசுவது போல ஒவ்வொருவரும் தலைமையால் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு ஏற்பட்டதாக எம்.எல்.ஏ ஒருவரே பகிர்ந்துகொண்டார். கூட்டத்தின் இறுதியில் தீபாவளிப் பரிசாகப் பட்டு வேட்டி மற்றும் பட்டுப் புடவை வழங்கப்பட்டாலும், வெற்றுத் தாளில் பெறப்பட்ட கையெழுத்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தையும் கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+