சேலம் கல்லூரி மாணவர்களிடம் ஆதார் அட்டை வாங்கி ரூ.1 லட்சம் கடனா? ரூ.1,000 கமிஷன் பின்னணி என்ன?
சேலம்: நம்முடைய ஆதார் அட்டையை ஒருவரிடம் கொடுத்தால் என்னாகும்? வங்கி கணக்கில் பணம் போடுகிறோம், அதுக்காக உங்களுக்கு ரூ.1000 கமிஷன் தருகிறோம் என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? அப்படித்தான் கமிஷன் ஆசையை காட்டி கல்லூரி மாணவர்களிடம் ஆதார் அட்டையை வாங்கியிருக்கிறார்கள்.. கடைசியில், வங்கியிலிருந்து வந்த நோட்டீஸைப் பார்த்து மாணவர்கள் ஆடிப்போய்விட்டார்கள்.. வங்கியில் கடன் வாங்காத மாணவர்கள், இப்போது தங்கள் பெயரில் பெறப்பட்டதாக கூறப்படும் ரூ.1 லட்சம் கடனை திருப்பி செலுத்த வேண்டிய நெருக்கடியிலும் சிக்கியுள்ளனர்.. சேலத்தில் அப்படி என்னதான் நடந்தது?
சேலம் சின்னதிருப்பதியை சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி கண்ணகி (45). இவர் சேலம் பெண்கள் கிளைச் சிறை பகுதியில் "பெஸ்ட் எம்பவர்மென்ட்" என்ற பெயரில் டிரஸ்ட் நடத்தி வந்துள்ளார்.

சேலம் மாணவர்கள்
இந்த டிரஸ்ட் நிர்வாகிகள் சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் பலரை சந்தித்துள்ளனர். அப்போது, மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் பணம் வரும் என்றும், அந்தப் பணத்தைத் தாங்கள் சொல்லும் பேங்க் அக்கவுண்ட்டுக்கு அனுப்பினால் ரூ.1000 கமிஷன் தருவதாகவும் சொல்லியுள்ளனர். இதற்காக மாணவர்களின் ஆதார் அட்டைகளையும் கேட்டிருக்கிறார்கள்.
இதை நம்பிய பல மாணவர்கள் தங்களுடைய ஆதார் அட்டைகளைக் கொடுத்துள்ளனர். அதன்பிறகு, அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் பணம் வந்துள்ளது. அந்தப் பணத்தை அவர்கள் கூறிய கணக்குகளுக்கு அனுப்பியதும், சொன்னபடியே ரூ.1,000 கமிஷனும் கிடைத்துள்ளது
முஷ்ரப் பாஷா புகார்
இந்த மோசடி தொடர்பாக சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த முஷ்ரப் பாஷா (22) என்பவரும் இந்த மோசடி தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். இவர் பி.இ. 4ம் ஆண்டு படித்தபோது, கடந்த ஜனவரி மாதம் அவரது உறவினர் முபாரக், கன்னங்குறிச்சியைச் சேர்ந்த மோனிஷாவிடம் அவரை அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது மோனிஷா, முஷ்ரப் பாஷாவிடம், "உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் பணம் வரும். அந்தப் பணத்தை நான் சொல்லும் வங்கிக் கணக்குக்கோ, ஜிபே எண்ணுக்கோ அனுப்பிவைத்தால் உங்களுக்கு ரூ.1,000 கமிஷன் தருகிறேன்" என்றாராம். இதை நம்பிய முஷ்ரப் பாஷாவும் சம்மதித்துள்ளார்.
அதன்படி, கடந்த ஜனவரி மாதம் முஷ்ரப் பாஷாவின் வங்கிக் கணக்கில் ரூ.97,624 பணம் வந்துள்ளது. அந்தப் பணத்தை மோனிஷா கூறிய ஜிஆர் ஸ்கேனர் மூலம் அனுப்பியுள்ளார். இதற்காக அவருக்கு ரூ.1,000 கமிஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.
வந்தது வங்கி நோட்டீஸ்
இப்படி பணத்தை பெற்றுக்கொண்டு வேறு அக்கவுண்ட்களுக்கு அனுப்பிய மாணவர்களுக்கு, அடுத்த சில நாட்களிலேயே, அவர்களின் ஆதார் அட்டையிலுள்ள முகவரிக்கு தனியார் வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது.
அதில், கறவை மாடு வாங்குவதற்காக ரூ.1 லட்சம் விவசாயக் கடன் பெற்றுள்ளதாகவும், அதற்கான தவணைத் தொகையை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மாணவர்கள் யாரும் கறவை மாடு வாங்குவதற்காக வங்கியில் கடன் பெறவில்லை. அப்படியிருக்கும்போது தங்கள் பெயரில் கடன் பெற்றிருப்பதாக நோட்டீஸ் வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து வங்கியில் விசாரித்தபோதுதான், தங்கள் பெயரில் விவசாயக் கடன் பெறப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
புகார் மனுவில் என்ன?
இதையடுத்து, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரில், "எங்களை போல கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து ஆதார் அட்டைகளைப் பெற்று, விவசாயக் கடன் என்ற பெயரில் ரூ.75 கோடி வரை மோசடி நடந்துள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த 7,500க்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளோம்" என்று புகாரில் தெரிவித்துள்ளனர்.
அதேபோல முஷ்ரப் பாஷா அளித்த தனிப்பட்ட புகாரில், "என்னுடைய வங்கிக் கணக்கில் பணம் போட்டு, வேறு கணக்குக்கு அனுப்ப சொல்லி ரூ.1,000 கமிஷன் கொடுத்தார்கள், இதேபோல ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களிடம் ரூ.50 கோடி வரை மோசடி நடந்துள்ளது.. இந்த விவகாரம் தொடர்பாக நான் கேள்வி எழுப்பியபோது, ரவுடிகளை வைத்து கண்ணகி எங்களை மிரட்டுகிறார்" என்று முஷ்ரப் பாஷா தனது புகாரில் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
குவியும் புகார்கள் - 2 பேர் கைது
இந்த புகார்கள் தொடர்பாக சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இறுதியில் மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, டிரஸ்ட் நிர்வாகி கண்ணகி மற்றும் அவரது கூட்டாளியான முத்துகுமரன் (36) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் 7 பேரைத் தேடி வருகின்றனர். அதேபோல முஷ்ரப் பாஷா அளித்த தனிப்புகார் தொடர்பாகவும் அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆதார் கொடுப்பதில் கவனம்
இன்றைய காலகட்டத்தில், வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் பல்வேறு தேவைகளுக்கும் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. இதனால் பலரும், ஆதார் அட்டையின் நகலை கேட்பவர்களிடம் சாதாரணமாக எடுத்து தந்துவிடுகிறார்கள்.
ஆனால், நம்முடைய ஆதார் விவரங்களை பயன்படுத்தி வேறொருவர் கடன் வாங்கினால் என்ன செய்வது? நாம் வாங்காத கடனைத் திருப்பி செலுத்த சொல்லி வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்தால் எப்படி இருக்கும்?
சேலத்தில் நடந்துள்ள இந்த சம்பவம், ஆதார் அட்டையை யாரிடம் கொடுக்கிறோம் என்பதில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அதேபோல், எந்த வேலையும் செய்யாமல் கமிஷன் கிடைக்கிறது என்பதற்காக நம்முடைய அக்கவுண்ட்டில் பணத்தை பெற்று, வேறு அக்கவுண்ட்டுக்கு அனுப்பக் கூடாது... இதுபோன்ற செயல்கள் நம்மையே, கடன் பிரச்சினையிலும் சட்டச் சிக்கலிலும் கொண்டுபோய் நிறுத்தலாம்..!!!


Click it and Unblock the Notifications
