ஆஹா சூப்பர்.. வாட்டும் வெயிலுக்கு நடுவே தமிழகத்தில் கொட்ட போகுது கோடை மழை.. எங்கெல்லாம் தெரியுமா
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கும் நிலையில், வரும் நாட்களில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோடைக் காலம் வந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் பல இடங்களில் வெப்பம் உச்சத்தில் இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என கூறியிருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் கடந்த 24 மணி நேரத்தில் பெரியளவில் மழை பெய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
வெப்பம்: அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரைத் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 3° - 5° செல்சியஸ் அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 4.5° - 5.0° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. தமிழக உள் மாவட்டங்களில் பத்து இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 40° - 41.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 41.5° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் அதிகபட்ச வெப்பம் 41.2° செல்சியஸாக இருந்த நிலையில், சேலத்தில் 41.26° செல்சியஸ், தருமபுரியில் 41.0° செல்சியஸ் , மதுரை நகரம் மற்றும் விமான நிலையம், நாமக்கல், திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தலைநகர் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் 34.7° செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 35.8° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
வானிலை எப்படி இருக்கும்: அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஏப்ரல் 6) மற்றும் நாளை (ஏப்ரல் 7) ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 8ஆம் தேதி கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை இருக்கிறது: வரும் ஏப்ரல் 10ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 11 மற்றும் 12 தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வெப்ப அலை: இன்று முதல் ஏப்ரல் 10 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதும் இல்லை. அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° - 3° செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையக்கூடும். குறிப்பாக ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications