இஸ்லாமிய பெண்களின் ஆதரவு.. மோடிக்கு தான் அதிகம்.. அதாரமாகப் புகைப்படங்களைப் பகிர்ந்த வானதி சீனிவாசன்
சென்னை: மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் இஸ்லாமியப் பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டதாகக் கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ட்வீட் செய்துள்ளார்.
மத்திய பிரதேசத்திற்கு வந்துள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். குறிப்பாக நாட்டின் முதல் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற ரயில் நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் அதிகப்படியாக இஸ்லாமியப் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளதாகக் கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்,

பிரதமர் மோடி
மத்தியப் பிரதேச தலைநகர் போபால் நகருக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி, நாட்டிலேயே முதல் ஐஎஸ்ஓ-9001 தரச்சான்றிதழ் பெற்ற ரயில் நிலையமான ராணி கமலாபதி ரயில் நிலையத்தை இன்று திறந்து வைத்தார். 1979ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ரயில் நிலையத்தை நவீனமயமாக்க 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. இங்குக் கட்டப்பட்டு வந்த பணிகள் தற்போது முடிந்துள்ள நிலையில், ரயில் நிலையத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ரயில் நிலையம்
இதுநாள் வரை இந்த ரயில் நிலையம் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. இதனிடையே அம்மாநிலத்தின் புகழ்பெற்ற ராணியை நினைவு கூரும் வகையில் இந்த ரயில் நிலையம் ராணி கமலாபதி ரயில் நிலையம் என்று அழைக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த நவம்பர் 13ஆம் தேதி அறிவித்தது. ஒரே நேரத்தில் சுமார் 300 கார்கள், 800க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கான பார்கிங் வசதி, நவீன உணவகம், ஸ்ஃபா உள்ளிட்ட வசதிகளும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "இதுபோன்ற உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் சாதாரண பொதுமக்களுக்கும் கிடைக்க வேண்டும். இதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. இதுதான் பொதுமக்களுக்கு ஆட்சியாளர்களாகிய நாம் தரும் உண்மையான மதிப்பு, விஐபி கலாச்சாரத்திலிருந்து நாம் EPI காரசாரத்திற்கு மாறும் நேரம் இது. EPI என்றால் Every Person is Important என்று அர்த்தம்" என அவர் பேசினார்.

வானதி சீனிவாசன் ட்வீட்
இந்நிலையில், பிரமதர் மோடி கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் அதிகப்படியான இஸ்லாமியப் பெண்கள் கலந்து கொண்டதாகக் கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ட்வீட் செய்துள்ளார். புர்கா அணிந்து பெரும் திரளான இஸ்லாமியப் பெண்களின் படத்தைப் பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், போபாலில் பிரதமர் மோடியை வரவேற்க ஏராளமான இஸ்லாமியப் பெண்கள் வந்திருந்ததாக ட்வீட் செய்துள்ளார். வானதி சீனிவாசனின் இந்த ட்வீட்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications