சீட்டுக்கட்டு போல சரியுது.. ஒரு அமைச்சர் சிறையில்.. பொன்முடிக்கு தண்டனை ரெடி: பாய்ந்து வந்த அண்ணாமலை
சென்னை: ஒரு போலியான சித்தாந்தம் சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஐகோர்ட்டின் தீர்ப்பு குறித்து விமர்சித்துள்ளார் அண்னாமலை.
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியின் விடுதலையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொன்முடியும் அவரது மனைவியும் 64.90% வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வரும் டிசம்பர் 21ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அண்ணாமலை தனது எக்ஸ் சமூல வலைதள பக்கத்தில், "ஊழலை மட்டுமே தனது அரசியல் பிழைப்பாகக் கொண்டு, எதிர்ப்புக் குரல்களை அதிகார பலத்தின் மூலம் அடக்கிய ஒரு போலியான சித்தாந்தம், இன்று சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, இலாகா இல்லாத திமுக அமைச்சர் ஒருவர், ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார். தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடியோ, ஊழல் குற்றச்சாட்டில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
தென் தமிழகத்தில், மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த துயரமான வேளையில், தமிழக முதல்வரோ, ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப அரசியல்வாதிகளின், இந்தி கூட்டணி நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லிக்குச் சென்றிருக்கிறார்" என்று விமர்சித்துள்ளார்.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. இதனால் சாலை, வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. திரும்பும் திசை எல்லாம் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பொதுமக்களை மீட்டு வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் உள்பட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் 4-வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.
டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு இன்று இரவு 10.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். சென்னை மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் தற்போது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ள பாதிப்பு குறித்து எடுத்துரைத்து, விரைந்து நிதி ஒதுக்க கோரிக்கை வைக்க உள்ளார். அதன் பிறகு நாளை காலை டெல்லியில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்று, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளார்.












Click it and Unblock the Notifications