விஜயகாந்த் விடுத்த முக்கிய கோரிக்கை.. "தமிழக அரசுக்கு பிடிவாதம் கூடாது".. பரபர அறிக்கை
தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த இரண்டு வருடமாகவே கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தை பீடித்து கொண்டுவிட்டது.. இதனால், லாக்டவுன் போட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
கல்வி நிலையங்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டிருந்தன.. இதன்காரணமாக, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகதான் பாடங்கள் நடத்தப்படும் நிலைமை ஏற்பட்டது.. இதற்கு பிறகு அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக, தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

கல்லூரிகள்
இதையடுத்து, ஓரளவு இயல்பு நிலை திரும்பி கொண்டிருக்கிறது.. பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.. அதன்படி, கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நேரடியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. எனவே, பல இடங்களில் மாணவர்கள், தங்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு நடத்தியதால், இந்த செமஸ்டர் தேர்வையும் ஆன்லைனிலேயே நடத்துமாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் போராட்டம் செய்ததால், அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விஜயகாந்த்
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கை இதுதான்: "கொரோனா நோய் தொற்று காரணாமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. பின்னர் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கொரோன தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தற்போது பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு.. நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

ஆன்லைன் வகுப்புகள்
கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வந்தாலும் பண்டிகைகள் பருவமழை என அடிக்கடி விடுமுறை விடப்படுவதால், கல்லூரிகளில் நடப்பு தேர்வுக்கான பாடங்களை முழுமையாக முடிக்கப்படவில்லை என மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் ஆன்லைனில் வகுப்புகள் சரியாக நடைபெறவில்லை. ஆன்லைன் வகுப்புகளை எங்களால் சரிவர கவனிக்க முடியவில்லை என மாணவர்களே தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள்
இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று தமிழக அரசு பிடிவாதமாக இருப்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களை முழுமையாக உள்வாங்க முடியாத நிலையில், நேரடி தேர்வுகள் நடத்தப்பட்டால், தேர்வில் தோல்வி அடைந்து விடுமோ என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அவகாசம்
மேலும் நேரடி தேர்வுகள் நடத்த தமிழக அரசு இரண்டு மாதம் கால அவகாசம் வழங்கினாலும், அதற்குள் மாணவர்கள் தயாராவார்களா என்பது கேள்விகுறியே. எனவே மாணவர்களின் நலன் கருதி, நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும். ஆன்லைனில் தேர்வுகளை நடத்தக் கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications