Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இயற்கை பேரிடரில் உதவிக்கரம் நீட்டாமல் உதாசீனம்.. பாரபட்சம் காட்டும் பாஜக! இந்திய கம்யூ. கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் இயற்கை பேரிடரில் சிக்கி தவித்த போது உதவிக்கரம் நீட்டாமல் மத்திய அரசு உதாசீனப்படுத்தியதாக, பாஜகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை பதம் பார்த்தது. அதேபோல, டிசம்பர் இறுதியில் பெய்த கனமழை தென் மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியை சுழற்றி போட்டது. இந்த இரண்டு இயற்கை பேரிடர்களும் ஏராளமான பொருட் சேதங்கள், உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இதனை சமாளிக்க தமிழக அரசு மத்திய அரசிடம் நிவாரணத்தை கோரியிருந்தது.

Communist Party of India accused the central government for neglecting Tamil Nadu in the face of natural calamity

வெள்ள பாதிப்பு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாக வந்து ஆய்வை மேற்கொண்டார். மறுபுறும் டெல்லியில் பிரதமரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள நிவாரண நிதி குறித்த கோரிக்கை மனுவை கொடுத்திருந்தார். அதில் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு ரூ.19,692.69 கோடியும் தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புக்கு ரூ.18,214.52 கோடியும் என மொத்தம் ரூ.37,907.21 கோடி நிவாரணத் தொகையை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்குமாறு கோரியிருந்தார்.

ஆனால் மத்திய அரசு எந்த நிதியையும் வழங்கவில்லை என்று தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர். இப்படி இருக்கையில் தற்போது மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு ரூ.285.54 கோடியும், தென்மாவட்ட வெள்ள பாதிப்புக்கு ரூ.397.13 கோடியும் என மொத்தம் ரூ.682.67 கோடி நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆனால் மத்திய அரசு தற்போது கொடுக்க முன்வந்திருப்பது மிகவும் குறைவான நிதி என தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது x சோஷியல் மீடியா தளத்தில்,

"மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று விமர்சித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, நிதி பகிர்வில் மத்திய அரசு தமிழகத்தை உதாசீனப்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

"மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு கடந்த பத்தாண்டுகளாக தமிழ்நாட்டையும், மக்களையும் வஞ்சித்து வருகின்றது. ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் மாநில அரசின் வருவாய் ஆதாரங்களை வெட்டிக் குறைத்தது. இழப்பீட்டு நிதி மேலும் சில ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது. நீட் நுழைவுத் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்க மறுத்து வருவது ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடிப்பது.

அவசர காலத் தேவைக்கு மாநில அரசு கடன் வாங்க அனுமதி மறுப்பது என்று தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக ஒன்றிய அரசு, தமிழ்நாடு இயற்கை பேரிடர் தாக்குதலால் பேரிழப்பை சந்தித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்த நேரத்தில் கரம் நீட்டி உதவாமல் உதாசீனப்படுத்தி, அவதூறு பரப்பு அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செலில் ஈடுபட்டதை தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் மறந்து விட மாட்டார்கள்.

மிக் ஜாம் புயலும், பெருமழையும் தாக்குதல் நடத்தியது. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, பாதுகாத்து, மறுவாழ்வுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு ரூ2,477 கோடி செலவு செய்துவிட்ட நிலையிலும் மோடியின் பாஜக ஒன்றிய அரசு இரக்கம் காட்ட முன் வரவில்லை. ரூ. 37 ஆயிரத்து 907 கோடி பேரிடர் கால சேதாரங்களை சீர்படுத்த தேவை என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு அலட்சியம் செய்த நிலையில் தமிழ்நாடு அரசு உதவி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

உச்ச நீதிமன்றம் தலையிடும் சூழலில் ஒன்றிய அரசு மிக, மிக குறைவான சிறு தொகைக்கு அனுமதி வழங்கியிருப்பது, தமிழ் நாட்டையும், மக்களையும் அவமதிக்கும் செயலாகும். பாஜக ஒன்றிய அரசின் பாரபட்சம் காட்டி, பழிவாங்கும் செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாக தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.37 ஆயிரத்து 907 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+