விஜய்யின் ‘லியோ’வுக்கு வந்தது பிரச்சனை.. படக்குழு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசுக்கு போன புகார்!
சென்னை: 'லியோ' திரைப்பட டிரெய்லரில் நடிகர் விஜய் கெட்டவார்த்தை வசனம் பேசியது தொடர்பாக படக்குழு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'லியோ'. இந்தப் படத்தின் விஜய்யுடன் ஜோடியாக நடித்துள்ளார் த்ரிஷா. இவர்களுடன் சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் உள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

விஜய்யின் 'லியோ' படத்தில் இருந்து வெளியான போஸ்டர், ப்ரொமோஷன் வீடியோக்கள், பாடல்கள் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று முன்தினம் மாலை படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லர் ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தாலும், ஒரு சர்ச்சையும் வெடித்தது.
'லியோ' டிரெய்லரில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசுவது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. ட்ரெய்லரில் நடிகர் விஜய் கெட்டவார்த்தை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அனைவராலும், குறிப்பாக குழந்தைகளால், பெண்களால் விரும்பக்கூடிய ஒரு ஹீரோ, அனைவரின் கவனமும் பெற்ற ஒரு திரைப்படத்தின் ட்ரெய்லரில் இப்படி பேசியது தவறு என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமூகப் பொறுப்புள்ள ஒரு நடிகர் இப்படிச் செய்யலாமா எனக் கேள்விகள் எழுந்துள்ளன.
முன்னதாக, விஜய் புகை பிடிப்பது போல இருக்கும் லியோ போஸ்டர் வெளியான போதும் சர்ச்சை எழுந்தது. முன்னணி நடிகரான விஜய், புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பது இளைய சமூகத்திற்கு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் கண்டித்திருந்தனர். இந்நிலையில் ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் லியோ படக்குழு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. லியோ பட டிரெய்லரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தையை நீக்க வேண்டும். நடிகர் விஜய் முன்னுதாரணமாக செயல்படாமல் ஆபாச வார்த்தையை பயன்படுத்தினால் அது பலரது நிஜ வாழ்க்கையில் எதிரொலிக்கும். டிரெய்லரை தணிக்கை செய்யாமல் யூடியூபில் வெளியிட்ட படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications