வெளிநாட்டிலிருந்து முந்திரி.. காசு கட்டி ஏமாந்த நிறுவனம்.. ஜாமீன் கூடாது.. சிஇஓவிற்கு எதிராக மனு
சென்னை: தான்சானியாவிலிருந்து கொண்டைக்கடலை மற்றும் முந்திரி இறக்குமதியில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தனது நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என 'அன்சியோ' நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொண்டைக்கடலை மற்றும் முந்திரி இறக்குமதி செய்ய பணம் ஒதுக்கப்பட்ட நிலையில் அப்பணத்தில் முறைகேடு செய்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரில் 'அன்சியோ' நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இதற்கு நிறுவனம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்திரி
தமிழ்நாட்டிலிருந்து ஏறத்தாழ 5,500 கி.மீ தொலைவில் உள்ள 'தான்சானியா' நாட்டிலிருந்து அதிக அளவில் கொண்டைக்கடலை, முந்திரி உள்ளிட்டவை இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முந்தி ஆலைகள் இயங்கி வருகிறது. இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வரும் 'கச்சா' முந்திரிகள் இங்கு தரம் பிரிக்கப்படுகிறது. இது லாபகரமான தொழில் என்பதால் தான்சானியா முந்திரிக்கு எப்போதும் 'டிமான்ட்' இருந்துகொண்டே இருக்கும்.

ஏமாற்றம்
இவ்வாறு இருக்கையில், சென்னை வானகரத்தை சேர்ந்த அன்சியோ (ANSIO) இந்தியா என்ற தனியார் நிறுவனம் தான்சானியாவிலிருந்து கொண்டைக்கடலை மற்றும் முந்திரி பருப்பு இறக்குமதி செய்வதற்காக 'சாய் சூர்யா' ஏற்றுமதி நிறுவனத்திடம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் அமெரிக்க டாலர் (ரூ.8.5 லட்சம்) தொகையை வங்கி மூலம் பரிமாற்றம் செய்திருந்தது. ஆனால், குறிப்பிட்ட தேதியில் கொண்டைக்கடலையும் முந்திரியும் வந்து சேரவில்லை. சரி தாமதமாகும் என்று காத்திருந்த 'அன்சியோ' நிறுவனத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில், தற்போது வரை எதுவும் கைக்கு கிடைக்கவில்லை.

புகார்
ஏமாற்றமடைந்த நிறுவனம் காவல் துறையில் புகார் அளித்தது. புகாரில், பணம் பரிமாற்றம் செய்யப்பட்டபோது தங்கள் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்த எஸ் ஆர் ராமசுப்பிரமணியன் என்பவர் சாய் சூர்யா நிறுவனத்திடம் 26,866 அமெரிக்க டாலரை (ரூ.2.18 லட்சம்) லஞ்சமாக பெற்றதாக புகாரில் குறிப்பிட்டிருந்தது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக இந்த சம்பவம் மாறியதையடுத்து முன்னாள் சிஇஓ ராமசுப்ரமணியன், சாய் சூர்யா நிறுவனத்தை சேர்ந்த சரவணன் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவகாசம்
இதனையடுத்து காவல்துறை தரப்பில் விசாரணை தீவிரமாக்கப்பட்டது. ஒருபுறம் புகார் மறுபுறம் விசாரணையை கண்ட முன்னாள் சிஇஓ ராமசுப்பிரமணியன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'முன்ஜாமீன்' வழங்கக் கூடாது என அன்சியோ நிறுவனம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரு மனுக்களும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை விளக்கம் அளிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கி விசாரணையை நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications