பாஜக தனித்து போட்டியிட வாய்ப்பில்லை.. அதிமுக உடனான மோதல் தற்காலிகம் தான்.. திருமாவளவன் பேட்டி!
அதிமுக - பாஜக இடையிலான மோதல் தற்காலிகமானது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக - பாஜக இடையிலான மோதல் தற்காலிகமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக இணைந்தே போட்டியிடும் என்று கூறிய திருமாவளவன், திமுக கூட்டணியில் இருந்து விசிக விலக முயற்சிக்கிறது என்று அண்ணாமலை கற்பனையில் பேசி வருவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக - பாஜக தலைவர்கள் சிறு சிறு உரசல்கள் நடந்து வருகிறது. செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிமுக தலைவர்கள் பாஜகவினருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதனால் அதிமுக - பாஜக கூட்டணி முடிவுக்கு வருமா என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் பேட்டி
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் கூறுகையில், பாஜகவில் இருந்து நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைவது அதிர்ச்சியாகவும் அதேநேரம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதிமுக பாஜகவை தோளில் தூக்கி சுமக்கிறது என்ற விமர்சனம் தமிழ்நாட்டில் வலுவாக இருக்கிறது. அதனை விசிகவும் சுட்டிக்காட்டியிருக்கிறது. தற்போது பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைவது அரசியல் தலைகீழாக நடக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது.

தற்காலிகம்
ஆனாலும் இந்த மோதல் தற்காலிகமானது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக சேர்ந்து தான் போட்டியிடும். இந்த கூட்டணி குறித்து டெல்லியில் இருந்து தான் முடிவு எடுப்பார்கள். தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியிட வாய்ப்பில்லை. எனவே தற்போது ஏற்பட்டிருக்கும் சலசலப்பினால் எதோ மாற்றம் நிகழ போகிறது, அதிமுக தனித்து போட்டியிட போகிறது என்று நாம் எண்ணிவிட முடியாது என்று தெரிவித்தார்.

அண்ணாமலை கற்பனை
தொடர்ந்து விசிக அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக பேசப்படும் கருத்து பற்றிய கேள்விக்கு, திமுக கூட்டணியில் விசிக நல்லணிக்கத்தோடு இருக்கிறோம். எந்த உரசலும் இல்லை. திமுக கூட்டணியை மேலும் வலிமைப்படுத்த வேண்டும் என்பதில் விசிக வலுவாக இருக்கிறோம். பாஜக தலைவர் சாதுரியமாக பேசுவதாக கருதிகொண்டு கற்பனை செய்து பேசுகிறார்.

வாய்ப்பில்லை
விசிக திமுகவோடு இணக்கமாக இருக்கிறோம். திமுக அரசில் இருக்கும் அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளை அவ்வப்போது போராட்டங்கள் மூலம் சுட்டிக்காட்டுக்கிறோம். அவ்வாறு சுட்டிக்காட்டுவதன் மூலம் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று கூறுவது தவறு. அதற்கான வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

அண்ணாமலை மீது நடவடிக்கை
தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் வதந்தி பற்றிய கேள்விக்கு, வடமாநிலத்தவர் விவகாரத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு போடப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பில் எந்த குறையும் இல்லை. பீகார் மாநில அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தபின் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிபடுத்தியுள்ளனர். அண்ணாமலை மீது அரசு உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை, எடுக்கும் என்று நம்புவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications