"மோடி அரசின் பிரஷர்.. தமிழகத்திற்கு வந்த முதலீடு குஜராத்திற்கு மாற்றம்!" காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு
சென்னை: இப்போது நமது நாட்டில் புதிய செமிகண்டக்டர் ஆலைகளைக் கொண்டு வரப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட மத்திய அரசு 4 புதிய செமிகண்டக்டர் ஆலைகளை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கிடையே மத்திய அரசு செமிகண்டக்டர் ஆலைகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும் தமிழகத்திற்கு வர வேண்டிய ஆலை குஜராத்திற்கு மாற்றப்பட்டதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இப்போது வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக செமிகண்டகர்கள் இருக்கிறது.. பல அதிநவீனத் துறைகளுக்கு செமிகண்டகர்கள் முக்கிய தேவையாக இருக்கிறது. இதனால் இந்தியாவில் புதிய செமிகண்டகர் ஆலைகளை ஏற்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளும் வரும் என்பதால் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு
இதற்கிடையே செமிகண்டக்டர் ஆலைகளை ஒதுக்குவதில் மோடி அரசு பாரபட்சமாகச் செயல்படுவதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எதிராக மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி நான்கு செமிகண்டக்டர் திட்டங்களுக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
பாஜக மாநிலங்களுக்கு மாற்ற அழுத்தம்
ஒரு முன்னணித் தனியார் நிறுவனம் தெலுங்கானாவில் செமிகண்டக்டர் திட்டத்திற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்ததாகவும், அது ஆந்திராவுக்கு மாற்றப்பட்டால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். முன்னதாக தெலுங்கானாவில் இருந்து குஜராத்துக்கு இரண்டு செமிகண்டக்டர் உற்பத்தித் திட்டங்கள் மாற்றப்பட்டன என்றும் அதேபோல தமிழ்நாட்டில் திட்டமிடப்பட்ட ஒரு தொழிற்சாலை குஜராத்துக்கு மாற்ற ஒப்புக்கொண்ட பிறகே அதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மாநிலங்களிடையே போட்டி இருக்க வேண்டும் என மோடி சொல்லும் அதேநேரம் மத்திய அரசு இதுபோல பாரபட்சமாகக் காட்டுவதாக ஜெய்ராம் ரமேஷ் கூறினார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "மத்திய மோடி அரசு, நாட்டின் நான்கு புதிய செமி கண்டேக்டர் உற்பத்தித் திட்டங்களுக்கு (semiconductor manufacturing projects) அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்திற்கு வர வேண்டிய ஆலை
விரிவான ஆய்வுக்குப் பிறகு, ஒரு முன்னணி தனியார் நிறுவனம் தெலுங்கானாவில் இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தது. இருப்பினும், ஆந்திரப் பிரதேசத்திற்கு அதை மாற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதேபோன்ற மாற்றங்கள் இதற்கு முன்னரும் நிகழ்ந்துள்ளன. இரண்டு செமிகண்டெக்டர் உற்பத்தித் திட்டங்கள் தெலுங்கானாவிலிருந்து குஜராத்திற்கு மாற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டன. அதேபோல், தமிழ்நாட்டிற்காகத் திட்டமிடப்பட்ட ஒரு தொழிற்சாலையும் குஜராத்திற்கு மாற்றும் நிபந்தனையுடன் ஒப்புதல் பெற்றது.
மாநிலங்களுக்கு இடையேயான போட்டி இருக்க வேண்டும்.. அதுதான் இந்தியாவின் வலிமைக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் வலியுறுத்தி வருகிறார். ஆனால், மத்திய அரசு வெளிப்படையாகவே ஒருதலைப்பட்சமாகச் செயல்படும்போது, போட்டி கேலிக்கூத்தாகிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
செமி கண்டெக்டர் ஆலை
ஒடிசா, ஆந்திரா மற்றும் பஞ்சாப்பில் மொத்தம் ரூ.4,594 கோடி முதலீட்டில் செமி கண்டெக்டர் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்யவுள்ளன. முன்னதாக இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "இரண்டு பெரிய திட்டங்கள் ஒடிசாவிலும், தலா ஒன்று பஞ்சாப் மற்றும் ஆந்திராவிலும் அமைக்கப்படும். ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர்கள் இந்தத் திட்டங்கள் குறித்து எங்களிடம் பேசினர். கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க வேண்டும். இந்த ஆலைகள் அனைத்தும் 2-3 ஆண்டுகளில் செயல்படத் தொடங்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications