வெயிட்டாக எதிர்பார்க்கும் காங்., அசைந்து கொடுக்குமா அறிவாலயம்? லிஸ்டோடு தவிக்கும் கதர் கட்சியினர்!
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சில தொகுதிகளை காங்கிரஸ் தேர்ந்தெடுத்திருக்கும் நிலையில், அதனை திமுக அப்படியே தருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் அடுத்தடுத்த நகர்வுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் திமுகவால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு எளிதில் கிடைத்ததல்ல. ஆரம்பத்தில் காங்கிரஸ் 40 தொகுதிகள் வரை கேட்டிருந்தது.
திமுக காங்கிரஸ் கூட்டணி,
மேலும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் கூட்டணி உடையுமா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், ப.சிதம்பரம் மூத்த தலைவர்கள் தலையீட்டின் மூலம் சமரசம் ஏற்பட்டது. இறுதியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் வழங்கப்பட்டதன் மூலம் பிரச்சனை தீர்ந்தது. இந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் கவனம் முழுவதும் "எந்த தொகுதிகளில் போட்டியிடுவது?" என்பதிலேயே உள்ளது.
சத்தியமூர்த்தி பவன்
இதற்காக சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில மற்றும் தேசிய அளவிலான பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு, கடந்த தேர்தல் தரவுகள், வாக்கு விகிதங்கள், உள்ளூர் ஆதரவு நிலைமை போன்றவை குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளனர். கடந்த தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட சில தொகுதிகளில் நல்ல வெற்றியைப் பெற்றிருந்தது.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்
அதனால் அந்த "பாதுகாப்பான தொகுதிகளை" மீண்டும் கைப்பற்றப்பட வேண்டும் என்பது அக்கட்சியின் முதல் நோக்கமாக இருக்கிறது. காரைக்குடி, சிவகாசி, அறந்தாங்கி, ஸ்ரீபெரும்புதூர் (தனி), வேளச்சேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஊட்டி, நாங்குநேரி, மயிலாடுதுறை, பொன்னேரி, சோழிங்கர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, திருவாடானை, விருதாச்சலம் போன்ற தொகுதிகள் மீண்டும் கேட்கப்படவுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
28 தொகுதி பட்டியல்
இதற்கு மேலாக, 11 புதிய தொகுதிகளையும் காங்கிரஸ் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த பட்டியல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. காரணம், முதலில் கட்சி மேலிடத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதன் பிறகே திமுகவிடம் இறுதி பட்டியல் வழங்கப்படும். இதற்கிடையில், ஊடகங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியானதாக செய்திகள் பரவின. ஆனால் அதனை தமிழக காங்கிரஸ் தலைவர் மறுத்துள்ளார்.
அதிகாரப்பூர்வ பட்டியல்
"அதிகாரப்பூர்வ பட்டியல் கட்சி தலைமையிலிருந்து மட்டுமே வெளியாகும்" என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம், கட்சி இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை என்பதும் தெளிவாகிறது. மேலும், இந்த முறை வேட்பாளர் தேர்விலும் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட சிலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாமல், புதிய முகங்களுக்கு இடம் அளிக்கப்படலாம். இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் உள்ளது.
திமுக
2026 தேர்தலில் பல சிக்கல்களிருக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சி மிகவும் கவனமாக தனது அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது. திமுகவுடன் நல்ல உறவை பேணிக்கொண்டே, வெற்றி வாய்ப்பு அதிகமான தொகுதிகளை உறுதி செய்வதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தொகுதி பட்டியல் வெளியானதும் கூட்டணியின் முழு தேர்தல் படிமம் தெளிவாகும். ஆனால், காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை திமுக அப்படியே தருமா? அல்லது வேறு தொகுதிகளில் காங்கிரஸை போட்டியிட கேட்டுக் கொள்ளுமா? என்ற பரபரப்பும் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications