ராகுல் காந்தியால் மக்கள் எழுச்சி.. தேசிய அளவில் காங்கிரஸை உள்ளடக்கிய கூட்டணி தேவை.. ஸ்டாலின் அதிரடி
ராகுல் காந்தி சூப்பர்.. தேசிய அளவில் காங்கிரஸை உள்ளடக்கிய கூட்டணி தேவை.. ஸ்டாலின் தந்த அதிரடி ஐடியா!
சென்னை: இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய போது இருந்த கொள்கைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிட கூடாது. இந்த அரசியலமைப்பு சட்டத்தை காக்க வேண்டும் என்றால் அதற்கு தேசிய அளவில் கூட்டணி அமைக்க வேண்டும். அந்த கூட்டணியில் காங்கிரசும் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க அதிமுக முயன்று வருவதாக கடந்த சில நாட்களாக விவாதங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு, காங்கிரசுடன் கூட்டணி வைக்க அதிமுக முயன்று வருவதாகவும், திமுக காங்கிரஸ் கூட்டணி முறிய போவதாகவும் அரசியல் வல்லுநர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர். அதிமுக மாஜி அமைச்சர் சிவி சண்முகம் கூட திமுக + பாஜக கூட்டணி வைக்க போவதாக சமீபத்தில் பரபரப்பு பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் குறித்தும், காங்கிரசுடன் திமுகவிற்கு இருக்கும் நட்பு குறித்தும் முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக பேசி இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி பின்வருமாறு ..

பேட்டி
கேள்வி: இமாச்சல பிரதேச தேர்தலை விட மற்ற தேர்தல்களில் காங்கிரஸ் சரியாக செயல்படவில்லையே.. காங்கிரஸ் கட்சியின் இந்த தொடர் தோல்விகளுக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் அதனுடைய மதிப்பை இழந்துவிட்டதாக நான் கருதவில்லை. காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக சோனியா காந்தி எடுத்த சில முடிவுகளுக்கு இப்போதுதான் பலன் கிடைக்க தொடங்கி உள்ளது. மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கட்சியை மீண்டும் வலிமையான நிலைக்கு கொண்டு வர தனது அனுபவத்தை பயன்படுத்தி வருகிறார். சகோதரர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. நாடு முழுக்க இந்த யாத்திரை கவனம் பெற்றுள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி மீண்டும் இந்தியாவில் தனது பழைய டிராக்கிற்கு வந்துள்ளது.

ராகுல் காந்தி
கேள்வி: ராகுல் காந்தியை நீங்கள் தொடர்ந்து ஆதரித்து வருகிறீர்கள்.. குஜராத் தேர்தலில் ராகுல் காந்தி இன்னும் தீவிரமாக உழைத்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியை தேசிய அளவில் வழி நடத்தி, பாஜகவிற்கு எதிராக வலிமையான எதிர்க்கட்சியாக நிலைநிறுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: ராகுல் காந்தி நம்பிக்கை அளிக்க கூடிய இளம் தலைவர். ப. சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் குஜராத் செயல்பாட்டை ஆய்வு செய்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளனர். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வைக்கும் கருத்துக்கள் மிகவும் வலிமையான கருத்துக்கள். அவர் பல விவகாரங்களில் ஆழமான, தீர்க்கமான நிலைப்பாடுகளை கொண்டு இருக்கிறார்.

நிலைப்பாடு
அவர் தனது கொள்கையில் உறுதியாக இருக்கிறார். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை பண்பை அவர் மதிக்கிறார். மத வேறுபாட்டை எதிர்க்கிறார். ஒரு மொழியை திணிப்பதை அவர் எதிர்க்கிறார். அவரின் இந்த கொள்கைகள் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானவை. பாஜகவை தேர்தலுக்காக மட்டும் ராகுல் காந்தி எதிர்க்கவில்லை. கொள்கை ரீதியாகவும் எதிர்க்கிறார். அதனால்தான் ராகுல் காந்தியை பாஜக எதிர்க்கிறது. ராகுல் காந்தியின் வலிமையை இது காட்டுகிறது.

காங்கிரஸ் உறவு
கேள்வி: காங்கிரஸ் கட்சியுடன் இருக்கும் கூட்டணி திமுகவிற்கு எவ்வளவு உதவியாக இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? வரும் தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி தொடருமா? 2024 தேர்தலில் கூட்டணி தொடருமா?
பதில்: நம்முடைய அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய போது இருந்த கொள்கைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிட கூடாது. இந்த அரசியலைப்பு சட்டத்தை காக்க வேண்டும் என்றால் அதற்கு தேசிய அளவில் கூட்டணி அமைக்க வேண்டும். அந்த கூட்டணியில் காங்கிரசும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்கனவே நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறோம். அந்த கூட்டணி வெற்றிகரமான கூட்டணி என்பது நிரூபணம் ஆகி உள்ளது, என்று முதல்வர் ஸ்டாலின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications