உ.பியை விட தமிழகத்திற்கு அதிக கடன்.. கூட்டணியில் இருந்துகொண்டே திமுகவை விமர்சித்த காங்கிரஸ் நிர்வாகி
சென்னை: இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு என்று திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விமர்சித்துள்ளது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு புதிய புதிய திட்டங்களை செயல்படுத்தி மக்களைக் கவர்ந்து வருகிறது. இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த அரசுக்கு அதிகம் செலவாகும். இதனால் தமிழகத்தின் கடன் சுமையும் அதிகரிக்கிறது. தமிழகத்தின் கடன் சுமை தற்போது 10 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் தமிழ்நாடுதான் கடன் அதிகமாக வைத்துள்ளது. 2010 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தின் நிலுவை கடன், தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாட்டின் கடன், உ.பி-யைவிட 2 மடங்கு அதிகம்.
இந்திய மாநிலங்களில் வட்டி சுமை அதிகமாக கொண்ட மாநிலங்களில் பஞ்சாப், ஹரியானாவுக்கு அடுத்து 3-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. கடன்/ உள்நாட்டு உற்பத்தி, கொரோனா காலத்தை விட அதிகமாக உள்ளது தமிழ்நாட்டின் கடன்சுமை கவலைக்குரியது" எனத் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணி ஆற்றி வருகின்றன. திமுகவுடன் காங்கிரஸ் மேலிடம் அறிவித்த ஐவர் குழு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தவெக தலைவர் விஜய்யை, காங்கிரஸ் அகில இந்திய நிர்வாகியும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசியது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
எனினும், காங்கிரஸ் மேலிடம் பிரவீன் சக்கரவர்த்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மீது காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த விமர்சனத்தை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வரவேற்று திமுகவை கடுமையாக சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications