“வருமான வரி சோதனை நடக்கவில்லை என்பது அப்பட்டமான பொய்”.. வீடியோ ஆதாரம் வெளியிட்ட செல்வப்பெருந்தகை
சென்னை: வருமான வரி சோதனை எதுவும் நடத்தவில்லை என வருமான வரித்துறை கூறுவது அப்பட்டமான பொய் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவிட்டுச் செல்வது தொடர்பான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார் செல்வப்பெருந்தகை.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில், சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக கடந்த 20 ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, சீருடை இல்லாமல் வருமான வரித்துறையினர் என சொல்லிக் கொண்டு, இந்தி பேசும் நபர்கள், தன் வீட்டில் சோதனை நடத்தியதாகவும், ராகுல் பிரசாரத்திற்கு செல்ல முடியாத வகையில் தடுக்கப்பட்டதாகவும் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினார்.

ஆனால் "செல்வப்பெருந்தகை சொன்னது போல், அவரது வீட்டில் சோதனை எதுவும் நடத்தவில்லை" என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 20 ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு சமீபத்திய தேதிகளிலோ செல்வப்பெருந்தகைக்கு எதிராக வருமான வரித்துறையினரால் எந்தவிதமான சோதனையோ ஆய்வோ அல்லது அமலாக்க நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லம் உட்பட எந்தவொரு இடமும், வருமானவரித் துறையின் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என வருமான வரித்துறை விளக்கம் அளித்தது. இது தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை என வருமான வரித்துறை மறுத்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அதுகுறித்து விளக்கம் அளித்தார். அதில், நான் தங்கியிருந்த இடம், அலுவலகங்களில் திடீர் சோதனை நடைபெற்றது உண்மைதான். ஏப்ரல் 24 ஆம் தேதி காலை 11 மணிக்கு வருமான வரித்துறை சோதனை தொடர்பான முழு ஆதாரங்களை வெளியிடுவேன் என அறிவித்தார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்ள இருந்த நேரத்தில் என்னை அரசியல் ரீதியாக முடக்குவதற்காகவே சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் இதனை முற்றிலும் மறுத்து வருகின்றனர். ஜனநாயகத்தின் மீது எனக்கு உள்ள நம்பிக்கையுடன் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர உறுதியாக இருக்கிறேன் என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் உள்ள மணிமங்கலத்தில் நேற்று வாக்களித்த பின், செல்வப்பெருந்தகை கூறுகையில், "எனக்கு, உண்மையைச் சொல்ல எந்த தடையும் இல்லை. சட்ட ரீதியாக எதையும் எதிர்கொள்ள தயார். யார் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதை, வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு, செய்தியாளர்களை சந்தித்து, வீடியோ மற்றும் போட்டோ ஆதாரத்துடன் வெளியிடுவேன்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில், பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று காலை 11 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "ராகுல் காந்தி 2ஆம் கட்ட பிரச்சாரத்திற்கு தமிழ்நாட்டுக்கு வருவதாக உறுதி செய்யப்பட்டிருந்தது. நான் படப்பையில் ஒரு அலுவலகத்தில் தங்கி இருந்தேன். அதற்கு முந்தைய தினத்தில் இருந்தே 6 இன்னோவா கிறிஸ்டா கார்களில் வந்த தமிழ் பேசத்தெரியாத அதிகாரிகள் முற்றுகை இட்டிருந்தனர்.
நான் ஸ்ரீபெரும்புதூர் தெற்கு பகுதியில் பிரச்சாரத்திற்குச் சென்றிருந்தேன். திமுகவைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் வீடு தான் எனது அப்பகுதி அலுவலகம். நான் சென்றபிறகு, அங்கு வந்து முதலில் சிசிடிவிஐ அணைத்துள்ளனர். ரெய்டு நடத்துவதற்கு எதற்கு சிசிடிவியை ஆஃப் செய்ய வேண்டும்? அங்கு இருந்தவர்கள் அனைவரின் செல்போன்களையும் பறித்துள்ளனர். பணம் எங்கே எனக் கேட்டு தேடியுள்ளனர்.
சிசிடிவி காட்சிப் பதிவுகளை பார்த்துள்ளனர். பின்னர் கையெழுத்து வாங்கிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினர். சிசிடிவி ஆஃப் செய்யப்படவில்லை. இது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. ஆனால், அடுத்த நாள் நாங்கள் எங்கும் சோதனை செய்யவில்லை என அறிக்கை வருகிறது. உண்மைக்குப் புறம்பாக பேசுகிறோம் எனச் சொல்கிறார்கள்.
எனக்கு 2 நாட்களுக்கு முன்பே இந்த சிசிடிவி வீடியோ கிடைத்துவிட்டது. அப்போதே இதை வெளியிட்டிருந்தால் தேர்தல் ஸ்டண்ட் என்பார்கள். அதனால் தேர்தல் முடிந்த பிறகு இன்று வெளியிடுகிறேன். நாங்கள் ரெய்டு நடத்தினோம், கிடைத்தது கிடைக்கவில்லை என வெளிப்படையாக அறிவிக்க வேண்டியது தானே?
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள், தலைவர்கள் எத்தனை பேர் வீடுகளில் சோதனை நடத்தி இருக்கிறீர்கள், அதேபோல, என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் பாஜக, அதிமுக, பாமக, அமமுக வேட்பாளர்கள் எத்தனை வீடுகளில் ரெய்டு நடத்தினீர்கள், எவ்வளவு கைப்பற்றினீர்கள் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வீடியோவை வெளியிட்டு பேசிய செல்வப்பெருந்தகை, "இந்த வீடியோவில் இருக்கும் அதிகாரிகள் யார்? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? ரெய்டு நடத்தியது தவறில்லை. ரெய்டு நடத்தினால், நடந்ததை சொல்ல வேண்டியது தானே? அதில் என்ன ரகசியம் இருக்கிறது" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications