"தவெக மீதுதான் காதல்.. கல்யாணம் செய்துகொண்டது திமுகவை என காங்கிரஸ் தலைவர் சொன்னார்”- நாஞ்சில் சம்பத்
சென்னை: "எங்களுக்கு தவெக மீதுதான் காதல். ஆனால் கல்யாணம் செய்துகொண்டது திமுகவை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் வருத்தத்துடன் என்னிடம் சொன்னார்" என தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில், முன்னணி கட்சிகளைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தவெக தீவிரமாகத் தயாராகி வருகிறது.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை தவெக கூட்டணியில் இணைக்க செங்கோட்டையன் முயற்சி மேற்கொண்டு வருகிறார். தவெக உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, விஜய்யை சந்தித்துப் பேசியது திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன், தவெக தலைவர் விஜய் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தன்னிடம் திமுக கூட்டணியில் இருப்பது குறித்து கவலையுடன் பேசியதாக தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசுகையில், "மாற்றத்திற்கான அரசியல், மாற்று அரசியலுக்கு தமிழ்நாட்டில் தேவை இருக்கிறது. அதை இட்டு நிரப்ப வந்தவர்கள் எல்லாம் தோற்றார்கள், தொலைந்தார்கள். அதிகாரத்தின் நிழல் படியாத ஒரு கட்சியாக இருக்கும் தவெக, நாளை அதிகாரத்திற்கு வரும் என்ற நம்பிக்கை நாட்டு மக்கள் மத்தியில் இன்று உதயமாகி இருக்கிறது.
விஜய்யின் அதிர்வுகள், இந்திய அரசியலில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தோடு கூட்டணி வைக்க பல கட்சிகள் ஆசைப்படுகின்றன. காங்கிரஸ் கட்சிக்கும் அந்த ஆசை இருக்கிறது. நான் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என் பக்கத்து இருக்கையில் இருந்தார்.
அவரிடம் நீங்கள் தவெக உடன் கூட்டணிக்கு முயற்சிக்கிறீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார், "எங்களுக்கு தவெகவின் மீதுதான் காதல். ஆனால் கல்யாணம் செய்துகொண்டது திமுகவை" என்று அவர் வருத்தத்துடன் என்னிடம் சொன்னார்.
எல்லாக் கட்சிகளும் தவெக எனும் நந்தவனத்துக்கு வருவதற்கு நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய ராஜதந்திரி விஜய். அவர்கள் திருவண்ணாமலையில் திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல மாநாடு நடத்துகிற அன்றைக்கு, அரசியலில் 1000 பிறை கண்ட அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையனை தவெகவில் இணைத்ததன் மூலம் திமுக மண்டல மாநாடு பற்றி யாரும் எதுவும் பேசவில்லை.
டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள். அவரது நினைவிடம் நோக்கி பேரணிகள் நடந்தன. அன்றைக்குத்தான் தவெக தலைவர் விஜய் என்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். அன்றைக்கு நான் இணைந்தது செய்தியானதே தவிர அதிமுக நிகழ்ச்சி எதிலும் பெரிய செய்தி ஆகவில்லை. ஆக, எதிரியை எங்கே எப்போது அடிக்கவேண்டும் என்ற லாவகம் தெரிந்த ஒரே தலைவன் இந்திய அரசியலில் இன்றைக்கு விஜய் மட்டும் தான்" என நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் தவெகவில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கோட்டையனைத் தொடர்ந்து மேலும் பல முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகின்றனர். நாஞ்சில் சம்பத், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் தவெகவில் இணைந்துள்ளனர். இன்றும் திமுக, அதிமுக கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று தவெகவில் இணைகின்றனர்.












Click it and Unblock the Notifications