நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை வரும் சோனியா! வழி நெடுகிலும் பிரம்மாண்ட வரவேற்பு! காங்கிரஸ் தடபுடல்!
சென்னை: நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை வரும் சோனியா காந்திக்கு அவர் பயணிக்கும் வழி நெடுகிலும் பிரம்மாண்ட வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் கமிட்டி தடபுடலாக செய்து வருகிறது.
திமுக மகளிர் அணி சார்பில் வரும் 14ஆம் தேதி சனிக்கிழமை அன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் 'மகளிர் உரிமை மாநாடு' மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதில் இந்தியா கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த பெண் தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

திமுக சார்பில் கனிமொழி எம்.பி. விடுத்த அழைப்பின் பேரில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனி ராஜா என பலர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் சோனியாகாந்தியை பொறுத்தவரை உடல்நிலை காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை விடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எல்லா இடத்திற்கும் ராகுல் தான் சென்று வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் நீண்ட நாட்களுக்கு பிறகு திமுக விடுத்த அழைப்பை தட்டாமல் சென்னைக்கு வருகை புரிய இசைவு தெரிவித்துள்ளார்.
இதனால் சோனியா வருகையை திருவிழா போல் கொண்டாட தயாராகிவிட்டது தமிழக காங்கிரஸ் கமிட்டி. சென்னை விமான நிலையத்தில் சோனியாவுக்கு வரலாறு காணாத வரவேற்பு கொடுக்கத் திட்டமிட்டுள்ளார் செல்வப்பெருந்தகை. தமிழக காங்கிரஸ் கமிட்டி ரேஸில் இருந்து வரும் இவர் சோனியாவை வரவேற்க வேண்டி தனது ஆதரவாளர்களை குவிக்கவுள்ளார்.
மற்றொரு பக்கம் விமான நிலையம் தொடங்கி சோனியா பயணிக்கும் பாதைகள் எல்லாம் வழிநெடுக உற்சாக வரவேற்பு கொடுக்க திட்டமிட்டுள்ள கே.எஸ்.அழகிரி, சென்னை சுற்றுவட்டார மாவட்ட நிர்வாகிகளை அழைத்து இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதனிடையே சோனியாவை டெல்லியில் சந்தித்து பேச பலமுறை முயன்றும் முடியாமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பிய காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் சென்னையில் சந்திக்க ஆர்வமுடன் உள்ளனர்.












Click it and Unblock the Notifications