70 சீட் உறுதியாக வேண்டும்! ஸ்டாலினை ஒரு நிமிடம்! ஸ்டன்னாக்கிய ராகுலின் ரைட் ஹேண்ட்! கோபப்பட்டுட்டாரே
சென்னை: முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை கடந்த 2 நாட்களுக்கு முன் சந்தித்தது காங்கிரஸ் குழு. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் அமைத்த ஐந்து பேர் கொண்ட குழு, கடந்த புதன்கிழமை, திமுக தலைமையகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தது. இதில் ஏஐசிசி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மூத்த தலைவர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை, சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

திமுக காங்கிரஸ் - வெறும் அறிமுக கூட்டமா?
இச்சந்திப்பு ஒரு அறிமுகக் கூட்டம் மட்டுமே என்றும், தற்போது தொகுதிப் பங்கீடு குறித்த எந்த விவாதங்களும் நடைபெறாது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் இன்று எத்தனை இடங்கள் வேண்டும் என்ற முதல் கட்ட விருப்பம் தெரிவிக்கப்படும்.
"இது எங்கள் முதல்வருடனான முதல் மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே," என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழ்நாட்டிற்கு அழைத்து வரவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அமைத்த இந்தக் குழுவுக்கு கிரிஷ் சோடங்கர் தலைமை தாங்குகிறார். திமுக கூட்டணியில் இருந்து விலகி TVK கட்சியுடன் காங்கிரஸ் இணையலாம் என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இக்குழுவின் நோக்கம். குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், திமுக உருவாக்கும் இதேபோன்ற குழுவுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடரும் என்று தெரிவித்தார்.
உண்மை என்ன?
ஆனால் இது வெறும் சந்திப்பு கூட்டம் கிடையாது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஏஐசிசி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ராகுல் காந்தியின் ரைட் ஹேண்ட் போல செயல்படுகிறார் . இவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கம். இவர் ஸ்டாலினை தனியாக சந்தித்துள்ளார். ஸ்டாலினுடன் தனி ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த ஆலோசனையில்தான் அவர் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்துள்ளாராம். திமுக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த ஐவர் குழு சந்திப்பு, மரியாதை நிமித்தமானது எனத் தெரிவிக்கப்பட்டாலும், 2026 சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் குறித்தே முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளில் தங்கள் கட்சி வலுப்பெற்று, செல்வாக்கு உயர்ந்துள்ளதால், திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள் வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் ஸ்டாலினிடம் வலியுறுத்தினர். இம்முறை சுமார் 70 தொகுதிகளை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்; முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. கிரிஷ் சோடங்கர் இதை நேரடியாக ஸ்டாலினிடம் கேட்டுள்ளார். காங்கிரஸ் இவ்வளவு தொகுதிகளை கேட்டதை ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
கிரிஷ் சோடங்கர் ஸ்டாலின்
தேர்தலில் வெற்றி பெற்றால், மாநில ஆட்சியில் அதிகாரப் பங்கீடு வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரியுள்ளது. வலுவான காங்கிரஸ் கூட்டணிக்கு மேலும் மக்களை ஈர்ப்பதோடு, சமச்சீரான ஆட்சிக்கு வழிவகுக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டினர். இது, வெறும் துணைப் பங்காளியாக இல்லாமல், முக்கிய சக்தி என்ற காங்கிரஸின் இலக்கை உணர்த்துகிறது. தவெக ஆட்சியில் பங்கு தர தயாராக இருக்கிறது என்பதை மறைமுகமாக உணர்த்தும் விதமாக கிரிஷ் சோடங்கர் இப்படி கேட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஸ்டாலின் இதை விரும்பவில்லை, அவர் கோபப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
காங்கிரஸின் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தாலும், எவ்வித உறுதியையும் அளிக்கவில்லை. திமுக தனது தொகுதிப் பங்கீட்டுக் குழுவை அமைத்த பின்னரே பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார். சரியான நேரத்தில் இவை நடக்கும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணி உறுதியாக இருப்பதாக இரு கட்சிகளும் பொதுவெளியில் தெரிவித்தாலும், அதிக இடங்கள், அதிகாரப் பங்கீடு கோரிக்கைகள் பேச்சுவார்த்தைகளை சவாலாக அமையலாம். தமிழகத்தின் பெரிய கூட்டணி முக்கியமான தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால், வரும் வாரங்களில் தீவிரமான பேரம்பேசல்கள் நடக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications