இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி
சென்னை: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தயாரித்த வேட்பாளர் பட்டியலை நிராகரித்த ராகுல்காந்தி, புதிய பட்டியலை தயாரித்து 30-ந் தேதிக்குள் கொடுங்கள் என உத்தரவிட்டிருக்கிறார். இதன் பின்னணியில் காரசாரமான விவாதங்கள் நடந்திருக்கிறது.
திமுக கூட்டணியில் 28 சீட்டுகளை பெற்ற காங்கிரஸ் கட்சி, மனுத் தாக்கல் தொடங்கி விட்ட நிலையிலும் வேட்பாளர் பட்டியலை ரிலீஸ் செய்ய முடியவில்லை. தேசிய கட்சி என்பதால் அகில இந்திய தலைமையின் ஒப்புதல் அவசியம். அதன் பிறகே பட்டியல் ரிலீஸ் ஆகும்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்: 1. பொன்னேரி (தனி) 2. திருப்பெரும்புதூர் (தனி) 3. சோளிங்கர் 4. உதகமண்டலம் 5. ஏராடு கிழக்கு 6. அரந்தாங்கி 7. கடலூர் 8. மயிலாடுதுறை 9. காரைக்குடி 10. சிவகாசி 11. திருவாடனை 12. திருவைகுண்டம் 13. நாங்குநேரி 14. குளச்சல் 15. விளவங்கோடு 16. கிள்ளியூர் 17. வேளச்சேரி 18. ஊத்தங்கரை (தனி) 19. துறையூர் (தனி) 20. கவுண்டம்பாளையம் 21. ஆத்தூர் (தனி) 22. பென்னாகரம் 23. சிங்காநல்லூர் 24. அம்பாசமுத்திரம் 25. கிருஷ்ணகிரி 26. உசிலம்பட்டி 27. சங்கரன்கோவில் 28. மேலூர்
பொதுவாக, காங்கிரசில் எப்போதுமே வேட்பாளர் தேர்வு இழுத்துக் கொண்டே இருப்பது வாடிக்கையானது தான். கட்சியின் முன்னாள் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள்,. எம்.பி. க்கள் ஆகியரோடு கடந்த 28-ந்தேதி ஜூம் மீட்டிங் நடத்தினார் கிறிஸ் சோடங்கர். அப்போது, பாமகவின் கௌரவ தலைவர் ஜி. கே. மணியின் மகன் தமிழ்க்குமரனை காங்கிரசில் இணைத்து அவரை பென்னாகரம் தொகுதி வேட்பாளராக நியமிக்க செல்வப் பெருந்தகை முடிவு செய்துள்ளதை ஜூம் மீட்டிங்கில் விளாசித் தள்ளியிருக்கிறார் எம்.பி. கார்த்தி சிதம்பரம்.
அவர் பேசும் போது, '' தமிழ்க்குமரன் என்ன சச்சின் டெண்டுல்கரா? உடனே கட்சியில் சேர்த்து சீட் கொடுப்பதற்கு? யாருங்க இந்த தமிழ்க்குமரன்? காங்கிரசுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்? அவருக்கு எதற்கு சீட் ஒதுக்கணும். ஓ... இந்த நபருக்கு சீட் கொடுக்கத்தான் பென்னாகரத்தை திமுகவிடம் வாங்கப்பட்டதா? இதன் பின்னணியில் என்ன நடந்திருக்குன்னு எல்லாத்துக்கும் தெரியும் என்று மிக கடுமையாக விமர்சித்தார்.
எம். பி. க்கள் சிலரும் வரிந்து கட்டியுள்ளனர்
அவருக்கு ஆதரவாக எம். பி. க்கள் சிலரும் வரிந்து கட்டியுள்ளனர். இதனால் ஜூம் மீட்டிங் ரொம்பவும் காரசாரமாக இருந்துள்ளன. இந்த குற்றச் சாட்டுகளுக்கு செல்வம் விளக்கம் அளித்த நிலையிலும் எம்.பி.க்கள் அசரவில்லை. ஏற்கனவே, காங்கிரசில் தொகுதி தேர்வும் வேட்பாளர் தேர்வும் விற்கப்படுகின்றன என்கிற ரீதியில் எம். பி. ஜோதிமணி சர்ச்சையை கிளப்பியிருந்தார். அதை நிரூபிக்கும் வகையில், ஜூம் மீட்டிங்கில் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சில எம்.பி.க்கள், தமிழ் குமரன் சேர்க்கையை விமர்சனத்திற்குள்ளாக்கினர்.
இந்த நிலையில் தான், தனது ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்க வேண்டும், கட்சியின் சீனியர்களுக்கோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களுக்கோ சீட் கிடைக்க கூடாது என்ற கோணத்தில் தான் தொகுதிகளை (பொது + தனி ) பார்த்து பார்த்து வாங்கியதாகவும் செல்வத்தின் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த நிலையில், 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்து கார்கே மற்றும் கிறிஸ் சோடங்கர் மூலமாக ராகுல் காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார் செல்வ பெருந்தகை. பட்டியலை பார்த்த ராகுல், அதில் பல தொகுதிகள் மீது பென்சிலால் ரவுண்ட் போட்டுள்ளார். உடனே அந்த பட்டியலை நிராகரித்ததுடன், புது பட்டியலை ரெடி செய்து அனுப்புமாறு உத்தரவிட்டிருக்கிறார் ராகுல். இந்த ரகளை தான் தற்போது காங்கிரசில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications