கடைசி நாளில் வந்து.. சந்தோஷத்தில் இருந்த விஜயதாரணிக்கு செம ஷாக்.. விடாமல் துரத்தும் "அதே" பிரச்சனை!
சென்னை: காங்கிரசில் நிலவி வரும் கோஷ்டி மோதல் பிரச்சனை கட்சி நிர்வாகிகளை விடாமல் துரத்தி வருகிறது. முக்கியமாக விஜயதாரணிக்கு இது பெரிய சிக்கலாகி உள்ளது.
தமிழக காங்கிரசுக்குள் கடந்த சில வாரங்கள் கடுமையான கோஷ்டி மோதல் நிலவி வருகிறது. திமுக ஒதுக்கிய 25 தொகுதிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதற்குள் காங்கிரசுக்குள் ஏகப்பட்ட கோஷ்டி மோதல் ஏற்பட்டுவிட்டது.
ஒரு பக்கம் ஜோதிமணி வேட்பாளர் தேர்வு குறித்து கோபமாக டிவிட் செய்தார். ஜோதிமணி மீது கோபண்ணாவும் கோபம் அடைந்தார். இன்னொரு பக்கம் ப. சிதம்பரமும் கோபமாக கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

ப. சிதம்பரம்
வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடந்துவிட்டதாக பலர் புகார் வைத்துள்ளனர். முக்கியமாக விஜயதாரணி, பிரின்ஸ் போன்றவர்களுக்கு இடம் கொடுக்க கூடாது என்றும் சிலர் அழுத்தம் தெரிவித்தனர். இதனால் தேர்தல் பணிகளை கூட முறையாக செய்ய ஆள் இல்லாத நிலை அக்கட்சியில் ஏற்பட்டுள்ளது.

விஜயதாரணி
இதனால்தான் விஜயதாரணிக்கு இடம் கிடைப்பதில் முதலில் சிக்கல் நிலவியது. அவருக்கு எதிராக சில நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியதாக செய்திகள் எல்லாம் வந்தது. ஆனால் நீண்ட இழுபறிக்கு பின் கடைசியில் விஜயதாரணி பெயர் விளவங்கோடு தொகுதிக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டது. அவருக்கு விளவங்கோடு தொகுதியில் வெற்றி வாய்ப்பும் நன்றாக உள்ளது.

சந்தோசம்
இதனால் தற்போது விஜயதாரணி கொஞ்சம் சந்தோஷத்தில் இருந்தார். பிரச்சனைகளை சமாளித்து இடத்தை மீண்டும் பெற்றுவிட்டோம் என்று நிம்மதியில் இருந்தார். ஆனால் தற்போது திடீரென விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணிக்கு எதிராக காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சாமுவேல் ஜார்ஜ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

போச்சு
யாருமே எதிர்பார்க்காத வகையில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாளில் திடீரென வந்து விஜயதாரணிக்கு எதிராக காங்கிரசின் சாமுவேல் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத விஜயதாரணி தரப்பு அதிர்ச்சியில் உள்ளார். காங்கிரஸ் வாக்குகள் இதனால் சிதற வாய்ப்புகள் உள்ளன.

சிக்கல்
காங்கிரஸ் நிர்வாகிகள் இடையிலேயே இதனால் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. யாருக்கு தேர்தல் வேலை பார்ப்பது என்று குழம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரசில் வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. நிறைய பேர் சர்வாதிகாரி போல செயல்படுவதாக விஜயதாரணிக்கு எதிராக மனுதாக்கல் செய்த சாமுவேல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications