கணக்கில் ரூ.112 கோடி; அபராதமோ ரூ. 210 கோடி! உச்சகட்டத்தில் பாஜக Vs காங். யுத்தம்!
சென்னை: பாஜக Vs காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையேயான மறைமுக யுத்தம் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது.
வருமானவரிக் கணக்கைக் காலதாமதமாகத் தாக்கல் செய்ததற்காகக் காங்கிரஸ் கட்சியின் நான்கு வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கி உள்ளது. அது மட்டுமல்ல; ரூ 210 கோடி அபராதத்தையும் விதித்துள்ளது.

இந்தத் தொகை அபராதம் போல் இல்லை, தண்டையாகவே தெரிகிறது என காங். மூத்த தலைவர்கள் பேசி வருகிறார்கள். கூடவே எக்ஸ் தளத்தில் #DemocracyUnderAttack என்று ஹேஷ்டேக் போட்டு தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள்.
உச்சநீதிமன்றம் பாஜக கொண்டுவந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தைச் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்த அடுத்த நாளே, காங்கிரசின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர் என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

காங் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான், காங். கட்சியின் வங்கிக் கணக்கு, இளைஞர் காங். வங்கிக் கணக்கு ஆகிய இரண்டும் முடக்கப்பட்டுள்ளது என்பதை நேற்று தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் 'எங்களால் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியவில்லை. மின் கட்டணம் கூட கட்டமுடியவில்லை' என்று புலம்பாதக் குறையாக ஆதங்கத்தை அடுக்கடுக்காக கொட்டித் தீர்த்திருந்தார்.

தமிழ்நாடு முழுவதும் இதற்கு எதிராக காங். தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர் என்கிறார் காங். சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை.
'இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களும் போராடுவார்கள். காங்கிரஸ் பண பலத்தை நம்பி இல்லை. மக்கள் பலத்தை நம்பி உள்ளது' என்று கூறியுள்ளார் ராகுல்.

அவர், சொல்வது போல் மக்கள் பலம் காங்கிரசுக்கு உள்ளதா என்பதை 2024 மக்களைவைத் தேர்தல்தான் உறுதிப்படுத்த வேண்டும்.
இதனையடுத்து இந்தப் பிரச்சினை மூலம் பாஜக மற்றும் காங் இடையிலான யுத்தம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் மோடியின் படத்தை வெளியிட்டு 'சர்வாதிகாரி பயத்தில் இருக்கிறார்' என்று ஒரு ட்விட் போடப்பட்டுள்ளது.
அதில் வருமான வரித்துறையின் மூலம் காங்கிரஸ் கட்சியின் ரூ 112 கோடியை முடக்கியது ஏன்? ஏனென்றால் சர்வாதிகாரி எதிர்க்கட்சிக்குப் பயப்படுகிறார் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

கூடவே இந்திய ஜனநாயகத்தைச் சீர்குலைக்க பாஜக விரும்புகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து காங். கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், "தேர்தல் நேரம் பார்த்து நாட்டின் முக்கியமான காங்கிரஸ் கட்சியைச் செயலிழக்கச் செய்ய வேண்டும். அதன் பணிகளை முழுமையாக முடக்க வேண்டும். பாஜகவுக்கு ராகுல் தொடங்கி உள்ள யாத்திரை மீது வெறுப்பு இருக்கிறது. வட இந்தியாவில் ராகுல் காந்தியின் யாத்திரைக்குப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

இன்றைய போராட்டக் களத்தில் குதித்துள்ள விவசாயிகள் ராகுல் பக்கம் திரும்பி உள்ளனர். அவர் மூலமாகத்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வரும் என்று நம்பத் தொடங்கி உள்ளனர். அதைப் பார்த்துத்தான் பாஜக இதைப் போன்ற மூன்றாம் தர வேலைகளில் ஈடுபடுகிறது.

வருமானவரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாகத் தாக்கல் செய்துள்ளதற்காக 210 கோடி ரூபாய் அபராதம் கட்டச்சொல்வது என்பது எந்தவகையில் நியாயம்? இப்படி ஒரு அபராதத்தைக் கட்ட சொல்லி இதுவரை சுதந்திர இந்தியாவில் வேறு எந்தக் கட்சிக்கும் தண்டனை விதிக்கப்பட்டது இல்லை. அப்படி ஒரு வரலாறே கிடையாது.

இதற்காகக் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கி உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் அன்றாட வேலைகள் கூட நினைக்கக்கூடாது என்று அரசாங்கம் நினைக்கிறது. இது ஒரு எதேச்சதிகாரம் மனப்பான்மை.
இப்படி சதிகள் செய்து இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழிக்க நினைக்கிறார்கள். கட்சியில் உள்ள முக்கியமான சீரியர் தலைவர்களை விலை பேசி வாங்க வேண்டும். அப்படி வாங்க முடியவில்லை என்றால் அவர்களை வழக்கு விசாரணை என்று அலைக்கழிக்க வேண்டும்.

கூட்டணி சேர வரும் கட்சிகளைக் கூட்டணி சேரவிடாமல் நிர்ப்பந்தம் தரவேண்டும். இப்படி இந்திய ஜனநாயகத்தின் அஸ்திவாரத்தையே தகர்க்கும் முயற்சியில் இந்தப் பாஜக இறங்கி உள்ளது. மிகவும் ஆபத்தானது. இந்திய நாட்டின் அரசியல் என்பது அரசியல் கட்சிகளின் செயல்பாட்டில்தான் அமைந்துள்ளது.

ஆகவே வெகுஜன கட்சிகளை நிர்மூலமாக்கிவிட்டால், நாடாளுமன்ற ஜனநாயகமே அழிந்துவிடும். அதுதான் உண்மை. இதற்கு எல்லாம் சரியான பதிலை வருகின்ற மக்களவைத் தேர்தலின் போது மக்கள் சொல்வார்கள். அப்போது மோடிக்குப் பல உண்மைகள் புரியும்" என்கிறார்












Click it and Unblock the Notifications