ஆபரேஷன் 200.. காங்கிரஸ் ‘பிக் பிளானை’ கண்டுபிடித்த ஸ்டாலின்.. முளையிலேயே கிள்ளிய அறிவாலயம்!
சென்னை: "திமுக கூட்டணியில் இந்த முறை அனல் பறக்கிறது!" என்று அறிவாலய வட்டாரங்கள் புலம்ப தொடங்கி உள்ளன. அறிவாலய வட்டாரங்கள் கொண்டு வந்த தகவல்கள் அனைத்தும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து திமுகவும், சத்தியமூர்த்தி பவனும் ஆடிக்கொண்டிருக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்தையே பிரதிபலித்தன.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் முன்பை விட இப்போதுதான் உச்சக்கட்ட வெப்பத்தை எட்டியிருக்கிறது. 'ஆபரேஷன் 200' என்ற ஒற்றை இலக்கை நோக்கி திமுகவின் தேர்தல் எந்திரம் சுழலத் தொடங்கியிருக்கும் நிலையில், அந்தக் கூட்டணிக்குள்ளேயே ஒரு 'நிழல் யுத்தம்' நடப்பதுதான் இப்போதைய ஹாட் நியூஸ்.

காங்கிரஸின் கனவுத் திட்டம்!
சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்களில் கசிந்துள்ள தகவலின்படி, காங்கிரஸ் இந்த முறை ஒரு மாஸ்டர் பிளான் போட்டிருந்தது. "அதிமுக சரிவைச் சந்திக்கும் பட்சத்தில், அந்த எதிர்க்கட்சி இடத்தைப் பிடித்துவிட வேண்டும்" என்பதுதான் டெல்லி மேலிடத்தின் அஜெண்டா. ஒருவேளை கூட்டணிப் பேச்சுவார்த்தையில் 50 முதல் 60 இடங்களை மல்லுக்கட்டி வாங்கி, அதில் கணிசமாக வென்றுவிட்டால், சட்டசபையில் அதிமுகவை விட அதிக பலத்துடன் அமர்ந்து 'மெயின் எதிர்க்கட்சி' ஆகிவிடலாம் என கணக்கு போட்டது காங்கிரஸ். தமிழகத்தில் மீண்டும் வேர் பிடிக்க இதை ஒரு பெரிய வாய்ப்பாக அவர்கள் பார்த்தனர்.
அறிவாலயம் மோப்பம் பிடித்த 'திட்டம்'!
ஆனால், தமிழக அரசியலில் காய்களை நகர்த்துவதில் கில்லாடியான திமுக தலைமை, இந்த வியூகத்தை முளையிலேயே மோப்பம் பிடித்துவிட்டது. "கூட்டணிக்குள் இருந்துகொண்டே நமக்கு மாற்று சக்தியாக வளரப் பார்க்கிறார்களா?" என்ற கேள்வி அறிவாலயத்தின் சீனியர்கள் மத்தியில் அனலை கிளப்பியது.
அதிமுக 30 இடங்களுக்கும் குறைவாகவே வெல்லும் என கணிக்கும் திமுக, அந்த இடத்தை காங்கிரஸ் பிடிப்பதை ஒருபோதும் விரும்புவதில்லை. எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் அமர்ந்தால், அது தமிழக அளவில் திமுகவின் செல்வாக்கை பாதிக்கும் என்பதில் முதல்வர் தரப்பு உறுதியாக இருக்கிறது.
30-க்குள் சுருக்கிய 'செக்-மேட்'!
இதன் விளைவாகத்தான், காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டது திமுக தலைமை. "25 முதல் 30 இடங்களுக்கு மேல் ஒரு தொகுதி கூட கூடுதலாகத் தர முடியாது" என மிகக் கறாராக அறிவாலயம் சொல்லிவிட்டது.
"காங்கிரஸ் 30 இடங்களுக்கு மேல் வென்றால் அது நமக்குப் பின்னாளில் தலைவலியாக மாறும். அவர்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் வைப்பதுதான் திமுகவின் எதிர்காலத்திற்குப் பாதுகாப்பு" என தேர்தல் வியூகக் குழு கொடுத்த ரிப்போர்ட்டின் படியே இப்போது காய்கள் நகர்த்தப்படுகின்றன. உங்களுக்கு 30க்கு மேல் கொடுத்தால்தானே நீங்கள் அதிமுகவை முத்துவீர்கள்.. அதை முதலில் விட மாட்டோம் என்று காங்கிரசை திமுக கட்டிப்போட்டு உள்ளது.
எதிர்க்கட்சி அந்தஸ்து யாருக்கு?
அதிமுகவின் பலவீனம், காங்கிரஸின் அதீத ஆசை, திமுகவின் தற்காப்பு ஆட்டம் என மூன்று முனைகளிலும் தேர்தல் களம் இப்போது தகிக்கிறது. 200 இடங்களை வென்று சரித்திரம் படைக்கத் துடிக்கும் திமுக, தனது கூட்டணிக்குள்ளேயே இருக்கும் 'கை'யை முறுக்கித் தன் கட்டுப்பாட்டில் வைப்பதில் இப்போதைக்கு கொஞ்சம் வெற்றி பெற்றிருக்கிறது. இன்று மாலைக்குள் கூட்டணி என்ன ஆகும் என்று தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications