அடடே.. “ஆஸ்கர்” வென்ற ஏஆர் ரகுமான், கீரவாணி! “விதை” இயக்குநர் கே.பாலசந்தர் போட்டது! என்ன “கனெக்சன்”?
“அழகன் படத்தை இசையமைத்தது கீரவாணியா? மரகதமணி என்றுதானே உள்ளது என நீங்கள் கேட்கலாம்.”
சென்னை: ஆர்ஆர்ஆர் படத்தில் வெளியான நாட்டு நாட்டு என்ற பாடலுக்காக அதன் இசையமைப்பாளர் கீரவாணிக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு இருப்பது உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் நிலையில் இவருக்கும், இவருக்கு முன் ஆஸ்கர் வென்ற ஏ.ஆர்.ரகுமானுக்கும் மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கும் இடையில் உள்ள தொடர்பை பார்ப்போம்.
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோரை வைத்து இயக்கப்பட்ட திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
தெலுங்கில் தயாரிக்கப்பட்டு இருந்தாலும் பேன் இந்தியா படமாக வெளியான இந்த படம் அகில இந்திய அளவில் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன் கோல்டன் கிளோப் விருதை வென்றது.

ஆஸ்கர் வென்ற கீரவாணி
விரைவில் இது ஆஸ்கர் விருதையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வென்றுள்ளது நாட்டு நாட்டு பாடல். இந்த விருதை அப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக்கொண்டார். ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு ஆஸ்கர் விருது வென்ற இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை கீரவாணி பெற்றுள்ளார்.

ஆஸ்கர் தாகம்
கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமான ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்துக்காக தமிழ்நாட்டை சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருதை வென்றார். இந்திய திரையுலகின் பல நாள் ஆஸ்கர் தாகத்தை தமிழரான ஏ.ஆர்.ரகுமான் தீர்த்த நிலையில், கீரவாணியும் அதை பெற்று இந்தியர்களை மகிழ வைத்து இருக்கிறார்.

ஒற்றுமை
இந்தியாவுக்கான ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் கீரவாணி ஆகியோருக்கும் மறைந்த தமிழ் இயக்குநர் கே.பாலசந்தருக்கும் ஒரு சுவாரஸ்யமான தொடர்பு இருக்கிறது. ஆம், பல முன்னணி நடிகர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்த ஜாம்பவான் கே.பாலசந்தர்தான் இந்த 2 பேரையும் தமிழ் சினிமாவுக்கும் அறிமுகம் செய்து இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

ரோஜா திரைப்படம்
ஏ.ஆர்.ரகுமானை கே.பாலசந்தர் அறிமுகம் செய்தாரா? ரோஜா படத்தில் இயக்குநர் மணிரத்னம் தானே அறிமுகம் செய்தார். என்று நீங்கள் கேட்கலாம். இயக்குநராக அறிமுகம் செய்தது மணிரத்னம்தான். ஆனால், தயாரிப்பாளராக அவரை அறிமுகம் செய்து வைத்தவர் கே.பாலசந்தர். ஆம், ஏ.ஆர்.ரகுமானின் முதல் படமான ரோஜாவை தயாரித்தது கே.பாலசந்தரின் கவிதாலயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்தான்.

அழகன் திரைப்படம்
அதேபோல்தான் இசையமைப்பாளர் கீரவாணியும். 1990 ஆம் ஆண்டு தெலுங்கு படமான மனுசு மமதாவில் அறிமுகமான கீரவாணியை தமிழுக்கு கொண்டு வந்தவர் கே.பாலசந்தர்தான். இம்முறை இயக்குநராக அவர் கீரவாணியை அறிமுகம் செய்து வைத்தார். 1900 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான அழகன் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் கீரவாணி.

மரகதமணி யார்?
அழகன் படத்தை இசையமைத்தது கீரவாணியா? மரகதமணி என்றுதானே உள்ளது எனக் கேட்கலாம். கீரவாணிதான் மரகதமணி. மரகதமணிதான் கீரவாணி. ஆம், அவரது முழு பெயர் கொடூரி மரகதமணி கீரவாணி. தமிழில் மரகதமணி என்ற பெயரிலும் தெலுங்கில் கீரவாணி என்ற பெயரிலும் அவர் திரைப்படங்களுக்கும் இசையமைத்து வந்தார்.

இறந்தும் பெருமை பெறும் கே.பி.
1992 ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கி தயாரித்த வானமே எல்லை படத்திற்கு இசையமைத்தவரும் மரகதமணி கீரவாணிதான். இதன் மூலம் ஆஸ்கர் விருதுகளை வென்ற 2 இசையமைப்பாளர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார் இயக்குநர் கே.பாலசந்தர்.












Click it and Unblock the Notifications