மொபட் மீது மோதிய லாரி..கால்கள் துண்டாகி மீட்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி பலி..சென்னையில் சோகம்
சென்னை: சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மோதியதில் மொபட்டில் தோழியுடன் சென்றுகொண்டிருந்த நித்யா என்ற இளம்பெண்ணின் இரு கால்களும் துண்டானது. தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் நித்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், சாலையில் பள்ளம் மேடுகளாக உள்ளன.
எப்போதும் பரபரப்பாகவும் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாகவும் இருக்கும் இந்த சாலையில், சாலைகள் பள்ளம் மேடாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர்.

அடிக்கடி விபத்துகள்
குறிப்பாக பைக்கில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி அடிபட்டுக் கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதிலும் கடந்த 2 மாதங்களில் மட்டும் வேலப்பன் சாவடியில் இருந்து வானகரம் வரையிலான சாலையால் ஏற்பட்ட விபத்து காரணமாக 8 பேர் வரை பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வானகரம் அருகே கண்டெய்னர் லாரி மோதியதில் மொபட்டில் வந்த இளம்பெண் கால் துண்டாகி படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

மொபட்டை நித்யா ஓட்டினார்
சென்னையை அடுத்துள்ள மாங்காடு அம்பாள் நகர் பகுதியை சேர்ந்தவர் நித்யா (வயது 27). அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கடன் வழங்கும் பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நித்யா தனது தோழியான பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்த ரோகிணி (வயது 24) என்பவருடன் நேற்று முன் தினம் இரவு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். நித்யா மொபட்டை ஓட்ட ரோகிணி பின்னால் அமர்ந்து இருந்தார்.

கன்டெய்னர் லாரியின் டயர் ஏறி இறங்கியது
பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் அடுத்துள்ள வானகரம் சிக்னல் அருகே இருவரும் வந்த மொபைட் மீது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதியது. இதில் நித்யாவும் ரோகிணியும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். கீழே விழுந்தவர்கள் மீது கன்டெய்னர் லாரியின் டயர் ஏறி இறங்கியது. இதில் நித்யாவின் இரண்டு கால்களும் சிதைந்தன. ரோகினியின் ஒரு காலில் பலத்த காய ஏற்பட்டது. விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் வலியால் இருவரும் துடித்தனர்.

கால்கள் அகற்றம்
இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன வாகன ஓட்டிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்த இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நித்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கன்டெய்னர் லாரி ஏறியிறங்கியதில் இரு கால்களும் சிதைந்ததால், நித்யாவின் இரு கால்களும் அகற்றப்பட்டன. ரோகினிக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை பலனின்றி பலி
இந்த நிலையில், நித்யா சிகிச்சை பலனிறி நேற்று பலியானார். விபத்தில் காயம் அடைந்த ரோகினி காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கு காரணமான கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மோகன் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில் பணியை முடித்து விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கி இளம்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications