இரண்டு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக வாரண்ட்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இரண்டு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை வரும் அக்டோபர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தலைமை செயலக நேரடி உதவி பிரிவு அதிகாரிகளுக்கு கூடுதல் இயக்குநர்களாக பதவி வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி பதவி உயர்வு கோரியிருந்தவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சரவணன் மற்றும் வைத்திய நாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எச்சரித்து இருந்தனர்.
ஆனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும் பதவி உயர்வு தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஸ்வர்ணா, மைதிலி ராஜேந்திரன் ஆகிய இரண்டு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 4 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications