சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு.. அவர்களில் ஒருவர் வன்னியராக இருந்தால்? இணையத்தில் பரவும் விஷமம்
சென்னை: ஜெய் பீம் சர்ச்சையைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பிற்கு உள்ள காவலர்களில் ஒருவர் வன்னியராக இருந்தால் என்ன நடக்கும் என்ற விஷமத்தனமான கருத்து இணையத்தில் பரவி வருகிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். தீபாவளி சமயத்தில் திரையரங்குகளைத் தவிர்த்துவிட்டு, இத்திரைப்படம் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்தப் படம் வெளியான போதே படத்தின் கருவையும் படம் எடுக்கப்பட்ட விதத்தையும் பலரும் பாராட்டி பாசிட்டிவ் தகவல்கள் தெரிவித்தனர். குறிப்பாகத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இத்திரைப்படத்தை வெகுவாக பாராட்டியிருந்தார்.

ஜெய் பீம்
நிஜ வாழ்க்கையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவியாக இருந்து ஒரு ரூபாய் கூட ஊதியமாகவே பெறாமல் வாதாடி நீதியை நிலைநாட்டித் தந்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவையும் பலரும் வெகுவாக பாராட்டினர். அதேபோலIMDB தளத்திலும் காட் பாதர் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களையும் பின்னுக்குத் தள்ளி, ஜெய் பீம் திரைப்படம் முதல் இடத்தைப் பிடித்தது. 10க்கு அந்த படத்திற்கு 9.6 வழங்கப்பட்டுள்ளது.

திடீர் சர்ச்சை
இப்படிப் பல சாதனைகளைப் படைத்து வரும் ஜெய் பீம் திரைப்படம் குறித்து முதல் சில நாட்கள் எந்தவொரு சர்ச்சையும் கிளம்பவில்லை. அதேநேரம் கடந்த சில நாட்களாகப் படத்தின் மீதான சர்ச்சை பூதாகரமானது. அதாவது இந்த படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளதாக வன்னியர் அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றனர். படத்தின் முக்கியமான காட்சி ஒன்றில் குற்றம் செய்த போலீஸ் அதிகாரியின் வீட்டில் உள்ள காலெண்டரில் வன்னியர் சாதியைக் குறிப்பிடும் வகையில் அக்னி கலசம் இருந்ததாகச் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து அந்த காலெண்டரில் இருந்த படம் மாற்றப்பட்டது.

தொடரும் சர்ச்சை
இருப்பினும், சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் சூர்யா மற்றும் அமேசான் நிறுவனத்துக்கு வன்னியர் சங்கம் சார்பில் நோட்டீஸும் அனுப்பப்பட்டது. மேலும், நடிகர் சூர்யாவை அடித்தால் பரிசு, உதைத்தால் பரிசு என்று சிலர் அறிவித்து பதற்றத்தை அதிகப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு வழக்கும் பதிவு செய்துள்ளது.

போலீஸ் பாதுகாப்பு
இதற்கிடையே சென்னை தியாகராய நகர் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சூர்யா தரப்பில் பாதுகாப்பு கோரப்படவில்லை. இருப்பினும், உளவுத்துறை அறிக்கையின்படி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடிகர் சூர்யாவின் சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் ஆயுதப் படையைச் சேர்ந்த 5 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியராக இருந்தால்?
ஒருபுறம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் இந்தப் பிரச்சினையை அரசியல் லாபத்திற்காகச் சிலர் வேண்டுமென்றே ஊதிப் பெருக்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இணையத்தில் சில விஷமத்தனமான கருத்துகளும் பரவி வருகிறது. கபிலன் தங்கராசு படையாட்சி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "நடிகர் சூர்யா வீட்டுக்குப் பாதுகாப்பு அளிக்கும் 5 காவலர்களில் ஒருவர் வன்னியர் ஆக இருந்தால் சூர்யாவின் நிலை என்னவாகும்?" என்று சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளார். இவரது பதிவு இணையத்தில் வைரல் ஆகியுள்ள நிலையில், சமூகத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பதிவிட்ட இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

வன்னியர் இல்லை கம்யூனிஸ்ட்
முன்னதாக உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பார்வதிக்குக் கடைசி வரை உறுதுணையாக இருந்தவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவிந்தன். இருப்பினும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கோவிந்தனை அந்த படத்தில் வன்னியராக அடையாளம் காட்டப்படவில்லை என திடீரென ஒரு க்ரூப் கிளம்பியது. அவர்களுக்கு மிகச் சரியான பதிலடியைக் கோவிந்தன் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் கம்யூனிஸ்ட். என்னை வன்னியர் என்றோ, படையாட்சி என்றோ சொல்லிச் சாதி அரசியலுக்குள் சுருக்காதீர்! உங்கள் சாதியினர் உழைக்கும் இடத்தில் எவ்வளவு பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள். அதைப் பேசுங்கள். அதைவிடுத்து ஜெய் பீம் படத்தை வைத்தோ என் சாதியைத் தேடியோ அரசியல் நடத்தாதீர்" என பளீச் எனக் கருத்து தெரிவித்துள்ளார்












Click it and Unblock the Notifications