ஐஐடி காமகோடியின் பேச்சு அபத்தம்! கோமியம் குடிச்சா பல பிரச்னைகள் வரும்.. எச்சரிக்கும் Dr.ரவீந்திரநாத்
சென்னை: கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியிருந்தது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், ஐஐடி இயக்குநர் காமகோடியின் பேச்சு அபத்தமானது எனவும், மாட்டின் கோமியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் கிருமிகள் உள்ளது என கூறியுள்ளார் பிரபல மருத்துவரான ரவீந்திரநாத்.
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மாம்பலத்தில் உள்ள கோ-சோலையில் கடந்த 15ம் தேதி மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் புகழ்பெற்ற சென்னை ஐஐடியின் இயக்குனரான காமகோடி பங்கேற்றிருந்தார்.

அப்போது பேசிய அவர், "கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது. இது ஜுரத்த கூட சரியாக்கும். பாக்டீரியா, பூஞ்சை பாதிப்புகளுக்கு எதிராக செயல்படுவதால் இதற்கு இந்த தனிச்சிறப்பு உண்டு. ஒருமுறை சந்நியாசி ஒருவருக்கு மிகுந்த காய்ச்சல் இருந்தது. அவர் கோமியத்தை குடித்தார். அவருக்கு 15 நிமிடங்களில் காய்ச்சல் விட்டுவிட்டது" என்று கூறியிருந்தார்.
கோவியம் குடிக்கக் கூடாது என பல மருத்துவ ஆய்வுகள் கூறியிருப்பதாக சொல்லப்படும் நிலையில், உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக பார்க்கப்படும் சென்னை ஐஐடியின் இயக்குனரே இப்படி பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஐஐடி இயக்குநர் காமகோடியின் பேச்சு அபத்தமானது எனவும், மாட்டின் கோமியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் கிருமிகள் உள்ளது என கூறியுள்ளார் பிரபல மருத்துவரான ரவீந்திரநாத்.
இதுதொடர்பாக ஒன் தமிழிடம் பேசியுள்ள மருத்துவர் ரவீந்தரநாத்," இது ஒரு மோசமான கருத்து மக்கள் நலனுக்கு எதிரானது. தற்போது பன்றிக் காய்ச்சல் பறவை காய்ச்சல் என பல்வேறு காய்ச்சல்களால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இது போன்ற காய்ச்சல்களை முறையாக கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் எந்த காய்ச்சலையும் 15 நிமிடத்தில் குணப்படுத்த முடியாது.
ஆனால் ஐஐடி இயக்குனர் காமகோடி "எனது அப்பாவுக்கு காய்ச்சல் வந்தது, சன்னியாசி ஒருவர் கோமியம் குடிக்க சொன்னார் 15 நிமிடத்தில் காய்ச்சல் சரியானது எனக் கூறியிருக்கிறார். இது அபத்தம். நான் சவால் விடுகிறேன் எந்த காய்ச்சலையும் 15 நிமிடத்தில் சரி செய்ய முடியாது. டெங்கு காய்ச்சல் நோயாளிக்கு கோமியம் குடித்து 15 நிமிடத்தில் காய்ச்சலை சரியாக்க முடியுமா? கொரோனா நோயாளியை 15 நிமிடத்தில் சரியாக்க முடியுமா?
இது மக்கள் மத்தியில் தவறான கருத்தை கொண்டு போய் சேர்க்கும். இந்தியாவில் பாமர மக்கள் அதிகம். இன்னும் பல நோய்களுக்கு மக்கள் வழிபாட்டு தலங்களை நாடி செல்கிறார்கள். இதனால் பலர் தாமதம் காரணமாக உயிர் இழக்கிறார்கள். கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாக வேண்டும் என்றால் மக்கள் மருத்துவர்கள் நாடிச் செல்ல மாட்டார்கள். நேராக பசு மாட்டின் கோமியத்தை எடுத்து குடித்துவிட்டு வீட்டில் இருப்பார்கள். இதனால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும்.
எனவே இது கடுமையான கண்டனத்திற்குரியது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. மிகப்பெரிய பதவியில் இருக்கக்கூடிய ஒருவர் அறிவியலுக்கு புறம்பான கருத்தை கூறுவது மிகவும் ஆபத்தானது. இது கடும் கண்டனத்திற்குரியது பசு மாட்டின் கோமியத்தில் ஏராளமான நோய்க்கிருமிகள் இருக்கிறது.
மிகவும் ஆபத்தான கிருமிகளும் இருக்கிறது. குறிப்பாக ஈ-கோலி என்ற பாக்டீரியா இருக்கிறது. அந்த பாக்டீரியா வயிற்றுப்போக்கு வாந்தியை உருவாக்கும். கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்ட பலர் உயிரிழக்கும் வாய்ப்புகளும் உண்டு. வயது வந்த இளைஞர்கள் கூட சரியான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் அவர்களுக்கு டிஹைட்ரேஷன் ஏற்பட்டு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
மேலும் இதன் மூலம் எலி காய்ச்சலும் வர வாய்ப்புள்ளது. எலிக்காய்ச்சலுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவில்லை என்றால் சிறுநீரக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு மற்றும் பிற உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. சென்னை ஐஐடியின் இயக்குனர் மெத்த படித்தவர். ஆனால் அவர் இந்துத்வா சிந்த்தாத்தை தூக்கிப் பிடிக்க வேண்டும், பசுவை உயர்த்திப் பிடிக்க வேண்டுமென இப்படி பேசியிருக்கிறார். முதலில் ஐஐடி சனாதன தன்மையில் இருந்து வெளியே வர வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications