பாமாயில் தினமும் பயன்படுத்துகிறீர்களா? சமையல் எண்ணெயை மாற்ற போகிறீர்களா? ஆய்வுகள் சொல்வது என்ன?
சென்னை: பாமாயில் நீங்கள் சமையலில் பயன்படுத்துகிறீர்களா? சமையலறையில் பயன்படுத்தப்படும் எண்ணெய் (Cooking Oil) என்பது வெறும் சுவைக்காக மட்டும்தானா? கிடையாது.. அது நமது உடல் ஆரோக்கியத்தோடும் நேரடியாக தொடர்புடையது. ஆனால், "எந்த எண்ணெய் சிறந்தது?" என்ற கேள்வி இன்று பல குடும்பங்களில் பொதுவாக எழும் சந்தேகமாக உள்ளது. இதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
பொதுவாக, சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்விக்கு ஒரே பதில் இல்லை. நாம் வாழும் பகுதி, உடல்நிலை மற்றும் உணவுப் பழக்கம் போன்றவற்றை பொறுத்து எண்ணெய் தேர்வு மாறலாம்.

தென்னிந்தியாவில் பொதுவாக கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றன. கடலை எண்ணெய் அதிக வெப்பத்தைத் தாங்கக்கூடியதால் பொரிப்பதற்கு ஏற்றது. நல்லெண்ணெய் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகளை அளிக்கக்கூடியது. தேங்காய் எண்ணெய் சிலருக்கு எளிதில் செரிமானமாகும். ஆனால் எந்த எண்ணெயாக இருந்தாலும் அது சுத்தமானதாகவும், சரியான முறையில் தயாரிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
ஒரே எண்ணெய் மாறி மாறி
எண்ணெய்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஒரு காரணம் உள்ளது. ஒவ்வொரு எண்ணெயிலும் கொழுப்பு அமிலங்களின் அமைப்பு வேறுபடுகிறது.
ஒரே எண்ணெய்யையே நீண்ட காலம் பயன்படுத்தினால், சில வகை கொழுப்புகள் அதிகமாகவும், சில குறைவாகவும் உடலில் சேர வாய்ப்பு உள்ளது. அதனால் சில மருத்துவ நிபுணர்கள் எண்ணெய்களை மாற்றி பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறார்கள். ஆனால் இது கட்டாய விதி அல்ல, சமநிலையான உணவுப் பழக்கம் இருந்தால் போதுமானதாம்.
சூடு படுத்திய எண்ணெய்
அதேபோல ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது கிடையாது. மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும்போது எண்ணெயின் தன்மை மாறுகிறது,.. இதனால் நீண்டகாலத்தில் இதய ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதனால் ஒருமுறை பொரிக்க பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
அதேபோல பாமாயில் குறித்து மக்களிடம் பல தவறான கருத்துகள் உள்ளன. பாமாயில் முற்றிலும் ஆபத்தானது என்று கூறுவது சரியானது அல்ல. இதில் சில வகை கொழுப்பு அதிகமாக உள்ளது என்பது உண்மை. அதனால் இதய நோய் உள்ளவர்கள் அல்லது கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் அளவோடு பயன்படுத்துவது நல்லது.
அதே நேரத்தில், சரியான அளவில் பயன்படுத்தினால் இது தீங்கு விளைவிக்கும் எண்ணெய் அல்ல. எந்த எண்ணெயாக இருந்தாலும் அதிக அளவில் பயன்படுத்துவது தான் முக்கிய பிரச்சனை.
4 ஸ்பூன் எண்ணெய்
எண்ணெய் எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும், அதை பயன்படுத்தும் அளவு மிகவும் முக்கியம். பொதுவாக ஒரு நபருக்கு நாளொன்றுக்கு சுமார் 3 முதல் 4 தேக்கரண்டி எண்ணெய் போதுமானதாக கருதப்படுகிறது. அதிகமாக எண்ணெய் பயன்படுத்துவது உடல் எடை அதிகரிப்பு மற்றும் இதய பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம்.
அதுமட்டுமல்ல, மேலும் எண்ணெய்யை புகை வரும் அளவுக்கு சூடுபடுத்தக் கூடாது. அதேபோல் ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.. மேலும், எண்ணெய் முழுமையாக தவிர்க்க வேண்டிய ஒன்று அல்ல. ஆனால் அதை சரியான அளவில், சரியான முறையில் பயன்படுத்துவது தான் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்கிறார்கள் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications