கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் தங்கம் மீதான கடன் வழங்கும் முறையில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள இந்த மாற்றம், நடுத்தர மற்றும் எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகப்பெரிய நிம்மதியைத் தரக்கூடிய ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள முக்கிய அம்சங்களையும், இதனால் பொதுமக்கள் அடையப்போகும் நன்மைகளையும், இதனால் ஏற்படும் சில பாதகஙகளையும் இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
2023ம் ஆண்டில், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதற்கு குறிப்பிட்ட உச்சவரம்பும் கடுமையான கட்டுப்பாடுகளும் இருந்தன.. 2023ல் நகைக்கடனுக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருந்த நிலையில், 2025ல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன..

இந்நிலையில், சமீபத்தில் RBI கொண்டு வந்த மாற்றத்தின் மூலம் அந்த வரம்புகளில் தளர்வு அளிக்கப்பட்டு, நகையின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு அதிக தொகையைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.. இந்த உச்சவரம்பை ரிசர்வ் வங்கி நீக்கியிருப்பதால், இது கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான மாற்றமாக கருதப்படுகிறது.
பொதுவாக, பெரிய வணிக வங்கிகளில் நகையின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் வரை கடன் வழங்கும் வசதி எப்போதும் இருந்து வருகிறது. ஆனால், கூட்டுறவு வங்கிகள் தங்கள் கட்டுப்பாடுகளால் அதிக கடன் வழங்க முடியாமல் தவித்து வந்தன.
இப்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதால், வணிக வங்கிகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் இனி தங்களுக்கு அருகிலுள்ள கூட்டுறவு வங்கிகளிலேயே அதிக கடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம். இது வங்கிகளுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும்.
கூட்டுறவு வங்கி - குறைந்த வட்டி
கூட்டுறவு வங்கிகளின் மிகப்பெரிய பலமே அவற்றின் குறைந்த வட்டி விகிதம் மற்றும் வாடிக்கையாளர்களுடன் இருக்கும் நெருக்கமான பலமான உறவுதான். அதுவும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு வணிக வங்கிகளை விடக் கூட்டுறவு வங்கிகளை அணுகுவது ரொம்பவே எளிதான விஷயம்..
உச்சவரம்பு நீக்கப்பட்டதன் மூலம், அவசர தேவைக்காக அதிகத் தொகை தேவைப்படும்போது, கந்துவட்டிக்காரர்களிடமோ அல்லது அதிக வட்டி வசூலிக்கும் நிதி நிறுவனங்களிடமோ மக்கள் தஞ்சமடைவது இனி குறையும். தங்களின் நகைகளுக்கு உரிய மதிப்பிலான தொகையை அரசு அங்கீகாரம் பெற்ற கூட்டுறவு வங்கிகளிலேயே பாதுகாப்பாகப் பெற்றுக்கொள்ளலாம்.
தங்க நகைகள் மூலதனம்
இந்த நடவடிக்கை மறைமுகமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். விவசாயிகள் தங்கள் விவசாயத் தேவைகளுக்காகவும், சிறு வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்காகவும் பெரும்பாலும் தங்க நகைகளையே மூலதனமாகப் பயன்படுத்துகிறார்கள்.
இப்போது கடன் தொகைக்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தங்கள் தொழிலுக்குத் தேவையான முழு முதலீட்டையும் ஒரே இடத்தில் கடனாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவுவதுடன், கடன் பெறுவதற்கான நடைமுறைச் சிக்கல்களையும் குறைக்கிறது.
பாதுகாப்பு உணர்வு
அதுமட்டுமல்ல, தனியார் நிதி நிறுவனங்களில் நகை வைப்பதை விட, கூட்டுறவு வங்கிகளில் வைப்பது மக்களுக்கு அதிக பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. ரிசர்வ் வங்கியின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் இந்த வங்கிகள் செயல்படுவதால், கடன் பெறும் முறை மற்றும் திருப்பி செலுத்தும் முறை போன்றவற்றில் அதிகப் வெளிப்படைத்தன்மை இருக்கும்... உச்சவரம்பு நீக்கப்பட்ட பிறகும், நகையின் தர பரிசோதனை மற்றும் ஆவணச் சரிபார்ப்பு போன்றவையும் வழக்கம்போலவே நடைபெறும்.
சுருக்கமாக சொன்னால், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை சாதாரண மனிதனின் கையில் புழங்கும் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். தங்க நகைகளை வெறும் சேமிப்பாக மட்டும் பார்க்காமல், தேவைப்படும் நேரத்தில் தடையின்றிப் பயன்படுத்தக்கூடிய ஒரு வலுவான நிதி ஆதாரமாக இது மாற்றியுள்ளது. கூட்டுறவு வங்கிகள் வலுப்பெறுவதற்கும், சாமானிய மக்கள் நிதி சுதந்திரம் அடைவதற்கும் இது ஒரு முக்கியமான படிக்கல்லாக அமையும்.
சில பாதகங்கள்
நகைக்கடனின் வட்டி குறைவாக இருந்தாலும், தவணைகளை நேரத்தில் செலுத்தவில்லை என்றால் அபராத வட்டி அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.,, தங்கத்தின் சந்தை விலை திடீரென குறைந்தால், வங்கிகள் கூடுதல் தொகையையோ அல்லது இன்னும் கூடுதலாக அடமான நகையையோ கேட்கக்கூடும்.. இதுபோன்ற சூழ்நிலைகள், நிதி நெருக்கடியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையாக மாறும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.!!












Click it and Unblock the Notifications