கொரோனா 2ஆம் அலை அதிக பாதிப்பு ஏன்? ரெம்டெசிவிர் உடலில் என்ன செய்யும்? மருத்துவர் பூபதி ஜான் விளக்கம்
சென்னை: கொரோனா 2ஆம் அலையில் நுரையீரல் பாதிப்பு வேகமாக ஏற்படுவதாகவும் இதனால் முடிந்தவரை அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர் பூபதி ஜான் ஓன் இந்தியா தளத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்தார்,
Recommended Video
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையின் தாக்கம் தீவிரமாக உள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு, அறிகுறிகள், தடுப்பூசி ஆகியவை குறித்து மருத்துவர் பூபதி ஜான் ஓன் இந்தியா தளத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்தார்.

இரண்டாம் அலை பாதிப்பு அதிகம் ஏன்
அப்போது அவர் கூறுகையில், "கடந்த ஆண்டு முதல் அலை படிப்படியாகவே அதிகரித்தது, ஆனால், இரண்டாம் அலை மிக வேகமாக நம்மை ஒரு சுனாமி போல தாக்கியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் வாரத்தில் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மட்டுமே இருக்கும். இரண்டாம் வாரத்தில் தான் நுரையீரல் பாதிப்பு அடையத் தொடங்கும். ஆனால், கொரோனா 2ஆம் அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஒரு சில நாட்களிலேயே ஏற்படுகிறது.

கொரோனா தடுப்பூசி
முதல் அலையில் முதியவர்கள் மத்தியில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், 2ஆம் அலையில் இளையவர்கள், சிறார்கள் மத்தியிலும் அதிகமாக உள்ளது. 2ஆம் அலையின் வீரியம் அதிகமாக உள்ளதால், நுரையீரல் பாதிப்பு மிக விரைவில் ஏற்படுகிறது. கொரோனா தடுப்பூசி ஒரு வரப்பிரசாதம். தடுப்பூசி ஏற்பட்டவர்களுக்கு வைரசின் பாதிப்பு குறைவாகவே இருக்கும். உயிரிழப்புகளையும் பெருவாரியாகக் குறைக்க முடியும். தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு சில தினங்கள் காய்ச்சல், ஜுரம் வருவது இயல்புதான். இதனால் உடலுக்கு மோசமான பாதிப்புகளும் ஏற்படாது.

யாருக்கு ஆக்சிஜன் தேவை
கொரோனாவால் பாதிக்கப்படும் 90% இது சாதாரண காய்ச்சலைப் போலவே இருக்கும், அவர்களின் நுரையீரல் பாதிக்கப்படாது. 5% பேருக்கு ஓரிரு நாட்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உதவி தேவைப்படும், மீதம் இருக்கும் 5% மட்டுமே பேருக்கு நுரையீரல் அதிகம் பாதிக்கப்படும், எனவே, அவர்களுக்கு மட்டும் நுரையீரல் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை ஆக்சிஜன் உதவி தேவைப்படும்.
ரெம்டெசிவிர் மருந்து
ரெம்டெசிவிர் மருந்து கொரோனா வைரசை அழிக்காது. அது கொரோனா வைரசின் வீரியத்தை மட்டுமே குறைக்கிறது. கொரோனா வைரஸ் ஒருவரது நுரையீரலை அதிகமாகப் பாதிக்கும்போது, அவருக்கு ரெம்டெசிவிர் அளித்துப் பாதிப்புகளைக் குறைக்கலாம். ஆனால், அதிலும் பக்கவிளைவுகள் உள்ளன. எனவே, மருத்துவரின் ஆலோசனைப்படியே ரெம்டெசிவிர் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications