இன்று முதல் அமலுக்கு வரும் கூடுதல் தளர்வுகள்.. எதற்கு தடை? எதற்கெல்லாம் அனுமதி.. விரிவான தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் வரும் நவ. 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பட்டுள்ள நிலையில், இன்று நவ. 1ஆம் தேதி முதல் பல புதிய தளர்வுகள் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு அக். 31ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. இந்தச் சூழலில் மருத்துவ வல்லுநர்கள் உடன் கடந்த வாரம் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அதன்படி தமிழ்நாட்டில் நவம்பர் 15-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், பல புதிய தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலம்
பண்டிகை காலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என முதலில் அஞ்சப்பட்டது. இருப்பினும், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கவில்லை. இந்தச் சூழலில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூடுதல் தளர்வுகள் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதேநேரம் பண்டிகை காலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள்
திரையரங்குகளில் நவம்பர் 1-ம் தேதி முதல் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்களுக்கான இரவு 11 மணி வரை செயல்பட வேண்டும் என்ற நேரக்கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது* கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாசார நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது

எவற்றுக்குத் தடை
அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் போன்ற அரசு பயிற்சி நிலையங்கள் 100% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இது தவிரத் திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையில் உள்ள தடை தொடரும் என்றும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரியக் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
Recommended Video

பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் தனித்து இயங்கும் அனைத்து வகை மதுக்கூடங்களுக்கும்(பார்கள்) இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு அரங்குகளில் விளையாட்டு, பயிற்சி போட்டிகள் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த 1-ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு முறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரளா தவிர பிற மாநிலங்களுக்கு 100% இருக்கையுடன் சாதாரண, குளிர்சாதன பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

முதல்வர் வேண்டுகோள்
பண்டிகைக் காலங்களில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் மட்டுமே பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகை நாட்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும், மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications