சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 30 ஆக உயர்வு - மீண்டும் தலைதூக்கும் கொரோனா?
சென்னை ஐஐடியில் 3 நாட்களில் மட்டும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.சென்னை ஐஐடியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12லிருந்து 30 ஆக அதிகரித்துள்ளது
சென்னை: கிண்டியிலுள்ள ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மேலும் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் 3 நாட்களில் மட்டும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னை ஐஐடியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12லிருந்து 30 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 666 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 18 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.முகக்கவசம், தனி மனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற பொதுமக்களுக்கு மருத்துவத்துறை அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டதால் தமிழக அரசு கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை தளர்த்தி உள்ளது. 2 ஆண்டுகளாக கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு கடந்த ஒரு மாதமாக தளர்த்தப்பட்டது. முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படாது எனவும் அரசு அறிவித்தது.

கொரோனா தொற்று, தற்போது, பல்வேறு நாடுகளில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாகி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில், கடந்த காலத்தைபோல், கண்டிப்பாக அல்லாமல் அன்போடு அனைவரும் முக கசவம் அணிந்து வரவேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனா்.
சென்னை விமான நிலையத்தில் போா்டிங் பாஸ் வாங்கும் இடம் என்றில்லாமல், அனைத்து பிரிவுகளிலும் பயணிகளை கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரும்படி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். பயணிகள் மட்டுமல்லாது பார்வையாளர்கள், விமான நிலைய ஊழியர்கள், பாதுகாவலர்கள் மற்றும் விமான நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுபவா்கள் உள்பட அனைத்து பிரிவினரையும், முக கவசம் அணியும்படி வலியுறுத்துகின்றனர்.

இதையடுத்து சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் ஐஐடி வளாகத்தில் நேரில் ஆய்வு செய்து மேலும் பரிசோதனைகளை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார். கோவிட் தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கவும், வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் பலரும் வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் என்றும் கூறியுள்ளார். வரும் மே 8ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் ஒரு லட்சம் இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
டெல்லியில் 15 நாட்களுக்கு முன்பு வரை, தமிழகத்தை போன்று தினசரி கொரோனா பாதிப்பு 30 பேர் என்ற எண்ணிக்கையில்தான் இருந்தது. ஆனால் தற்போது அது பல மடங்காக அதிகரித்து தொற்ற பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்மூலம் டெல்லியில் தொற்று பரவல் விகிதம் 1 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலால் டெல்லியில் நான்கு பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன. மகாராஷ்ட்ரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொற்று அதிகரிப்பால் இந்தியாவின் ஒட்டுமொத்த பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications