அதிர்ச்சி.. தமிழகத்திற்கு நேற்று வரவேண்டியது.. இன்னும் வரவில்லை.. எங்கே சென்றது கொரோனா ரேபிட் கிட்?
சென்னை: கொரோனாவை கண்டுபிடிப்பதற்கான ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா சோதனைகளை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கிறது.
தமிழகத்தில் மக்களுக்கு கொரோனா தீவிரமாக பாதிக்கப்பட்டாலும் கூட, கொரோனா சோதனைகள் மிகவும் குறைவாகவே நடத்தப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 8000 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

நேற்று சோதனை
நேற்று மட்டும் 1000 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்க காலத்தில் 300-500 பேருக்கு மட்டுமே கொரோனா சோதனை செய்யப்பட்டது. தற்போது இது கொஞ்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை 8486 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தமாக 16 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

பெரிய விமர்சனம்
ஆனால் தமிழகத்தில் 8000 பேருக்கு மட்டுமே சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு மீது பலரும் விமர்சனம் வைக்க தொடங்கி உள்ளனர். இதனால் தமிழக அரசு ரேபிட் கிட் மூலம் சோதனை செய்ய முடிவு செய்தது. கொரோனா சோதனைக்காக சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்க தமிழகம் முடிவு செய்து இருந்தது. இதன் மூலம் துரிதமாக கொரோனா சோதனைகளை செய்ய முடியும்.

துரிதமான சோதனை
ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் 15 நிமிடத்திலிருந்து 30 நிமிடத்துக்குள் தெரிந்து கொள்ளலாம். இது உடலில் இருக்கும் ஆண்டிபாடிகளை சோதனை செய்யும். அதன் மூலம் கொரோனா இருப்பதை கண்டுபிடிக்க முடியும். இதற்கு முன் செய்யப்பட்ட சோதனை கொரோனாவின் ஆர்என்ஏவை கண்டுபிடிக்கும் சோதனை ஆகும். அதை செய்ய 6 மணி நேரம் ஆகும். இதனால் சீனாவிடம் 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்க தமிழகம் முடிவு செய்து இருந்தது.

இரண்டு குழப்பம்
ஆனால் தமிழகத்திற்கு நேற்று வந்து சேர வேண்டிய ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் வந்து சேரவில்லை. இந்த கருவிகள் வர தாமதமானதால் கொரோனா ரேபிட் சோதனை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை கருவிகள் தற்போது எங்கே போனது என்று நிறைய குழப்பங்கள் நிலவி வருகிறது. இது தொடர்பாக இரண்டு விதமான செய்திகள் உலவி வருகிறது.

இரண்டு செய்திகள் என்ன
அதன்படி விமானம் தாமதம் ஆனதால் இந்த கருவிகள் சீனாவில்தான் இருக்கிறது. இன்னும் தமிழகம் வரவில்லை. ரேபிட் கிட் இன்னும் சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் இந்த கருவிகள் டெல்லி வந்துவிட்டது. ஆனால் மத்திய அரசு இந்த கருவிகளை தமிழகத்திற்கு அனுப்ப மறுக்கிறது. மொத்தமாக இந்த கருவிகளை தமிழகத்திற்கு அனுப்ப மறுக்கிறது என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

மிக மோசம்
மத்திய அரசு இக்கருவிகளைத் தமிழ்நாடு அரசு நேரடியாக வாங்குவதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் தமிழகத்துக்கு வரவேண்டிய ரேபிட் கிட் எங்கே சென்றது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 911 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் வேகமாக கொரோனா சோதனைகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் தற்போது கொரோனா சோதனை கருவி தமிழகம் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications