ஒற்றை சாளர முறை.. கட்டிட பொறியாளர்களை ஒரே பதிவின் கீழ் அனுமதிக்க வேண்டும்.. அரசுக்கு பெயிரா கோரிக்கை
சென்னை: கட்டிட பொறியாளர்களை ஒரே பதிவின் கீழ் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஃபெயிரா கோரிக்கை விடுத்துள்ளது.. மாநிலம் முழுமைக்கும் ஒற்றை சாளர முறையிலேயே எங்கிருந்தும் எந்நேரத்திலும் எளிதில் கட்டிட வடிவமைப்பாளர் உள்ளிட்ட பொறியாளர்களை அனுமதிக்கான திட்டங்களை தயாரித்து விண்ணப்பிக்கும் வகையில் வழிவகை செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறது.
உள்ளாட்சிகளில் தனித்தனியே பதிவு செய்வதை ஒருங்கிணைத்து, ஒற்றை சாளர முறையில் ஏதேனும் ஒரு துறையில் பதிவு செய்யும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சருக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், "தமிழகத்தில் தற்பொழுது மனைப் பிரிவு, மனை உட்பிரிவு, கட்டட அனுமதி, நில மறுவகைபாடு மாற்றம் உள்ளிட்ட அனுமதிகளை பெறுவதற்கு பொதுமக்கள், கட்டிட வடிவமைப்பாளர் (ARCHITECT), பதிவு பெற்ற கட்டிட பொறியாளர்கள் (REGISTERED ENGINEERS), உரிமம் பெற்ற கட்டிட அளவையர்கள் (LBS) உள்ளிட்டோரை அணுகி இவர்களின் உதவியுடன், அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, திட்ட அனுமதிக்கான வரைபடங்களை தயாரித்து சம்பந்தப்பட்ட அனுமதி வழங்கும் அதிகாரம் பெற்ற துறையின் இணையதளம் வாயிலாக (Online Portal) ஒற்றை சாளர முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அனுமதி பெற்று தருகின்றனர்.
எங்கிருந்தும், எந்த நேரத்திலும்: தமிழகத்தை பொறுத்தவரைக்கும் அனுமதி பெற தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டட திட்ட விதிகள் 2019-யின் படி மாநிலம் முழுமைக்கும் ஒரே மாதிரியான விதிகளையும், மற்றும் மாநிலம் முழுவதிலும் இருந்து அனுமதி கோரி எளிதில் எங்கிருந்தும் எந்நேரத்திலும் ஒற்றை சாளர முறையில் இணையத்தில் விண்ணப்பித்து அனுமதி பெறும் வகையிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் கூடுதலாக உடனடி அனுமதி (Instant Approval) பெறும் வகையிலும், பல சிறப்பான திட்டங்களை தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முன்னெடுத்து செயல்படுத்தி வருவது பொதுமக்கள் மற்றும் கட்டுனர்கள் - மனை அபிவிருத்தியாளர்கள் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
விண்ணப்பம்: மேலும் தமிழக அளவில் மேற்கண்ட அனுமதிகளை பெறுவதற்கு திட்டம் தயாரித்து விண்ணப்பிக்கக் கூடிய அதிகாரம் பெற்ற, கட்டிட வடிவமைப்பாளர் உள்ளிட்ட பொறியாளர்கள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA), நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP), மாநகராட்சி (CORPORATION), நகராட்சி (MUNICIPALITY), பேரூராட்சி (TOWN PANCHAYAT) மற்றும் ஊராட்சிகள் (RURAL PANCHAYAT) என தனித்தனியே பதிவினை செய்ய வேண்டியுள்ளது. இதன் காரணமாக கட்டிட வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட பொறியாளர்கள் பதிவினை செய்வதற்கு பல சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
ஆகவே தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, தற்பொழுது நடைமுறையில் உள்ள கட்டிட வடிவமைப்பாளர் உள்ளிட்ட பொறியாளர்கள் அனுமதி வேண்டி பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்களில் பதிவு செய்யும் நடைமுறையினை மாற்றியமைக்க வேண்டும்.
ஒற்றை சாளர முறை: மேற்கண்ட அனுமதி வழங்கும் துறைகளில் ( CMDA / DTCP / CORPORATION / MUNICIPALITY / TOWN PANCHAYAT / RURAL PANCHAYAT) ஏதேனும் ஒரு துறையில் மட்டும் பதிவு செய்திருந்தாலும் அதன் அடிப்படையில் மாநிலம் முழுமைக்கும் ஒற்றை சாளர முறையிலேயே எங்கிருந்தும் எந்நேரத்திலும் எளிதில் கட்டிட வடிவமைப்பாளர் உள்ளிட்ட பொறியாளர்களை அனுமதிக்கான திட்டங்களை தயாரித்து விண்ணப்பிக்கும் வகையில் வழிவகை செய்திட வேண்டும்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications